மன்மோகன் சிங் குடும்பத்தினரின் கோரிக்கை நிராகரிப்பு.. ராகுல் காந்தி, ஸ்டாலின் கண்டனம்
சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குடும்பத்தாரின் கோரிக்கையை நிராகரித்து, அவருக்கு பொருத்தமான இடத்தில் இறுதிச்சடங்கு நடத்த அனுமதிக்காதது ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையே அவமதிப்பதாகும் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இரு முறை பிரதமராக இருந்த தலைவரின் இறுதிச் சடங்கு நிகழ்வு நிகம்போத் காட்டில் நடந்துள்ளது.. மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு உரிய இடம் தராமல் மத்திய அரசு அவமதித்துவிட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு பொருத்தமான இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான உரிமையை அவரது குடும்பத்தினருக்கு மறுக்கும் பாஜக அரசின் முடிவு, அவரது உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை நேரடியான அவமதிப்பதாகும். டாக்டர் மன்மோகன் சிங்கின் குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்ததுடன், இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் ( டெல்லி இடுகாட்டிற்கு) பகுதிக்கு அனுப்பியது, ஆணவம் மட்டுமின்றி பாரபட்சம் ஆகும்.மேலும் மன்மோகன் சிங்கின் மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்ட முயற்சியாகும்.

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இந்தியாவின் பொருளாதாரத்தையே மாற்றியது . கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டது. அப்படிபபட்ட ஒரு அரசியல் தலைவரை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காமல், டெல்லி இடுகாட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை உருவாக்கியதன் மூலம் அரசு அவரை முற்றிலுமாக அவமதித்துவிட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "இந்திய அன்னையின் மகத்தான புதல்வரும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை டெல்லி நிகம்போத் காட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியதன் மூலம் மத்திய அரசு அவரை முற்றிலும் அவமதித்திருக்கிறது. அவர் இந்தியாவிற்கு 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக் காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியிருக்கிறது. அவரது கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக இருக்கிறது.
இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்துக்கு மதிப்பளித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட நினைவிடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு நபரும் எந்தவித சிரமமும் இன்றி அஞ்சலி செலுத்தினார்கள். டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும் தனி நினைவிடத்துக்கும் தகுதியானவர் ஆவார். தேசத்தின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்துக்கும் அரசு மரியாதை காட்டியிருக்க வேண்டும்" இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications