சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பு நிலம் மீட்பு
சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நீதிமன்ற உத்தரவின்படி, இன்று சென்னை திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலையில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில் சென்னையில் புகழ் பெற்ற மிக பழமையான கோயில் ஆகும். இங்குள்ள கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகள் நிறைந்தவை ஆகும். இந்த கோயில் எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே இக்கோயில் புகழ் பெற்றுள்ளது.

இக்கோயில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக்கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். இந்த கோயிலை சுற்றியுள்ள சில இடங்கள் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆகும்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலையில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான வணிக கட்டடம் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இமிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்த சாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமாக டாக்டர் நடேசன் சாலையில் உள்ள சதுரடி பரப்பிலான கடைகள் மற்றும் குடியிருப்புகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருக்கோயில் துணை ஆணையர் சி.நித்யா, உதவி ஆணையர் கி.பாரதிராஜா ஆகியோர் முன்னிலையில் காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு திருக்கோயில்வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.6 கோடியாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது தனிவட்டாட்சியர் ஆலயநிலங்கள் திருவேங்கடம் சிறப்புப் பணி அலுவலர்கள் கொளஞ்சி, நித்யானந்தம், .சுசில்குமார், திரு.ரமேஷ், ஆய்வாளர், மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications