பணம் கிழிந்துவிட்டதே என இனி கவலை வேண்டாம்; உங்களுக்காக ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு!
சென்னை: கிழிந்த ரூபாய் நோட்டுக்களை இனி எந்த வங்கியில் வேண்டுமானாலும் பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்களுக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையும் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது.
இதனால் இனி யாரும் கிழிந்த பணத்தை மறைத்து மறைத்து யாருக்கும் கொடுக்க வேண்டிய தேவையிருக்காது எனக் கருதப்படுகிறது.

பெரிய பிரச்சனை
இந்த பணம் செல்லாது கிழிந்திருக்கிறது மாற்றிக்கொடுங்கள் என்பதும் யார் சொன்னது செல்லும் என்பதும் கடைகளிலும், பேருந்துகளிலும், சந்தைகளிலும் நாம் அன்றாடம் பார்க்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. சிலர் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை நைஸாக ஒட்டி பணத்தாள்களுக்கு நடுவே வைத்து ஆட்டோவிற்கும், பேருந்திற்கும் கட்டணமாக கொடுக்கும் நிகழ்வுகளையும் நாம் கண்டிருக்க முடியும். இதனால் அங்கு எழும் வாக்குவாதத்தையும் பலரும் அறிந்திருக்க கூடும்.

ரிசர்வ் வங்கி
இனி இது போன்ற பிரச்சனைகளுக்கே இடமில்லை என்பது போல், கிழிந்த ரூபாய் நோட்டுக்களை உங்கள் அருகாமையில் உள்ள எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இது தொடர்பான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதமே ரிசர்வ் வங்கி வெளியிட்டாலும் கூட, கொரோனா கால நடைமுறையால் அது பின்பற்றப்படாமல் இருந்தது. இப்போது அந்த அறிவிப்பை அமலுக்கு கொண்டு வரும் வகையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது.

தயக்கம் வேண்டாம்
பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுக்களுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுக்கள் கொடுக்க வேண்டும், சில்லரை நாணயங்களை இல்லை என்று சொல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி வங்கி அதிகாரிகளிடம் தயங்கி தயங்கி கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொடுக்குமாறு கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படாது. நாடு முழுவதும் கிழிந்த பணத்தால் பலகோடி ரூபாய் வீணாவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது ரிசர்வ் வங்கி.

முந்தைய நடைமுறை
இதற்கு முன் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாநில தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் சென்னையில் வசிக்கக்கூடியவர்கள் மட்டுமே பெரிதும் பலன் பெற்று வந்தனர். கிராமப்புறங்களில் இப்படி ஒரு வசதி இருக்கிறது என்ற தகவலே பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது கிழிந்த பணத்தை எந்த வங்கியிலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications