இனி நிம்மதி.. சென்னையில் பீக் அவர்ஸில் ஸ்கூல், ஆபிஸ் போறீங்களா.. உங்களுக்கு குட்நியூஸ்
சென்னை: சென்னையில் அண்மையில் கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரியால் ஏற்பட்ட விபத்தினை அடுத்து, நகருக்குள் தண்ணீர் லாரிகள் வருவதற்கான நேர கட்டுப்பாட்டு விதிகளை போலீசார் தீவிரமாக அமல்படுத்தி உள்ளனர். தண்ணீர் லாரிகளால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதால் பீக் அவர்ஸில தண்ணீர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்னைக்கு வர தடை உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. அதனால் சாலைகளின் வழக்கமான அளவைவிட பாதி தான் தற்போது போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. மிகச்சிறிய சாலைகளில் மக்கள் பயணிக்கும் போது, பெரிய கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களை முந்தி செல்ல முயலும் போது பயத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். அப்போது ஒருவேளை கனரக வாகனங்கள் அதிவேகத்தில் முந்தும் போது விபத்துக்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தண்ணீர் லாரிகளால் அதிக ஆபத்து ஏற்படுகிறது. சென்னையில் தண்ணீர் லாரிகள் அதிவேகத்தில் ஊருக்குள் பீக் அவர்ஸில் இயக்கப்படுவதால் விபத்து ஏற்படுகிறது. பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும். அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்று காலை நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வார்கள்.. அந்த நேரத்தில் குறுகலான சாலைகளை தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அப்போது முந்தி செல்ல முயலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது நடக்கிறது. இதேபோல் அதி வேகத்தில் வரும் தண்ணீர் லாரிகள் இரு சக்கர வாகன ஓட்டிகளை முந்த முயலும் போதும் விபத்து ஏற்படுகிறது.
கடந்த வாரம், சென்னை கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி, தனது தாய் கண் எதிரிலேயே பள்ளி மாணவி உயிரிழந்தார். முன்னதாக கடந்த மாதமும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து தண்ணீர் லாரிகள் சென்னைக்குள் வருவதற்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நேரக்கட்டுப்பாடுகளை போக்குவரத்து போலீசார் மேலும் தீவிரமாக அமல்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக செவ்வாய் அன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சென்னை குடிநீர்வாரிய அதிகாரிகளுடன் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
அந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள காலை 7 மணிமுதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தண்ணீர் லாரிகளை சென்னை நகருக்குள் அனுமதிக்கக்கூடாது என்பதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி நேற்று வடசென்னை பகுதியில் மேற்கண்ட நேரக்கட்டுப்பாட்டை மீறி வந்த தண்ணீர் லாாரிகளை குடிநீர்வாரிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் வருவதற்கு ஏற்கனவே இதுபோன்ற நேரக்கட்டுப்பாடுகள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், அதையும் தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications