ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்.. பெண் எஸ்.பி பாலியல் தொல்லை வழக்கு விசாரணை!
சென்னை: பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகாரில், ஓய்வு பெற்ற ஐ.ஜி முருகன், சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த முறை நீதிமன்றம் பிடிவாரண்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றிவர் போலீஸ் ஐ.ஜி முருகன். இவர் சில் மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பணியாற்றிய போது ஐ.ஜி முருகன் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் சுல்தான் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் மனு தாக்கல் செய்தார். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர், தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சுந்தர்மோகன் தள்ளுபடி செய்தார். அதோடு, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை பெருநகர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி முருகன் ஆஜராகவில்லை. இதனையடுத்து முன்னாள் ஐ.ஜி. முருகனுக்கு நீதிபதி சுல்தான் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நீதிமன்றமாக சென்ற நீங்கள், இப்போது விசாரணைக்கு மட்டும் ஏன் ஆஜராக மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட், ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகாரில் பிடிவாரண்ட் எச்சரிக்கை விடுத்ததால் ஓய்வு பெற்ற ஐ.ஜி. முருகன், சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.












Click it and Unblock the Notifications