ராஜிவ் காந்தி படுகொலை.. நளினிதான் முதல் குற்றவாளி! இரவில் அவருக்கு அங்கே என்ன வேலை? அனுசுயா கேள்வி
சென்னை: தன் மீது நளினி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளி நளினிதான் எனவும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி அனுசுயா தெரிவித்து உள்ளார்.
நளினி விடுதலை தொடர்பாகவும், அவரது குற்றச்சாட்டு தொடர்பாகவும், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி அனுசுயா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி ஏ1 குற்றவாளி. அவரோடு சேர்ந்த 25 பேர் தூக்கு தண்டனை கைதிகள். பிறகு அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் தண்டனை குறைக்கப்பட்டது.

நளினி ஏ1 குற்றவாளி
இன்று அவர்கள் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 31 ஆண்டுகளுக்கு மேலாக 7 தூக்கு தண்டனை குற்றவாளிகள் சிறை தண்டனை அனுபவித்து குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கும் சட்டத்தால் உச்சநீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள். இன்று ஏ1 குற்றவாளி நளினி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார்.

பொய்யான தகவல்
அதில் பல பொய்யான தகவலை கொடுக்கிறார். என்னை பற்றியும் பேசுகிறார். நான் நளினியை சம்பவ இடத்தில் பார்க்கவே இல்லை என்று சொல்கிறார். சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும்போது அடையாள அணிவகுப்பில் 2 வது நபரை நான் நளினி என்று தவறாக அடையாளம் காட்டியதாகவும் அவர் கூறுகிறார்.

எந்த 2 பேர்?
செல்வ லட்சுமி என்பவர் நளினியை போன்ற தோற்றத்தில் இருந்ததால் போலீஸ் உதவியுடன் நான் நளினியை அடையாளம் காட்டியதாக சிறையிலிருந்து வெளியாகி சொல்கிறார். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் முன்பு விடுதலை புலிகள் அமைப்பினர், 5 பெண்கள் அமர்ந்திருந்தனர். இதில் எந்த 2 பெண்களை நான் அடையாளம் காட்டினேன்?

நளினியை தொட்டு காட்டினேன்
நளினியின் படம் எல்லா ஊடகத்திலும் 4 ஆண்டுகளாக வந்தது. எனவே அவரை எளிதில் அடையாளம் காட்டலாம். எனவே நளினி சொல்வது பொய். என்னுடைய சாட்சியத்தை 2 மணி நேரம் நீதிபதி பதிவு செய்த பிறகே அடையாளம் காட்ட சொன்னார். நான் குற்றவாளிகள் இருந்த இடத்தில் ஒவ்வொருவராக பார்த்து இது நளினி என்று அவரது தோளில் தட்டினேன்.

எதிர்க்கவில்லை
அப்போது வழக்கறிஞர் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை. அங்கிருந்த என்னுடைய சக போலீஸ் அதிகாரி தன்னுடைய வேலையைவிட்டு அங்கிருந்தவர்கள் மத்தியில் 2 விரலை காட்டவே முடியாது. இது மற்றவர்களின் கண்களுக்கு தெரியாதா? எனவே நளினி பொய்யான தகவலை சொன்னார்.

நீதிமன்றம் மீது குற்றம்சாட்டுவதா?
சிறப்பு நீதிமன்றம் எனது சாட்சியை மட்டும் வைத்து நளினிக்கு தூக்கு தண்டனை வழங்கவில்லை. 1444 சாட்சியை விசாரணை செய்து ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்தது. நான் பொய் சாட்சியென்றால் நீதிமன்றம் பொய் சாட்சியை பதிவு செய்துவிட்டு எல்லோருக்கும் தூக்கு தண்டனை கொடுத்துவிட்டதா? இதன் மூலம் நீதிமன்றத்தை அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

2 வது பொய்
அப்படியென்றால் நீதிபதிகள் எல்லாம் பொய்யானவர்களா? நீதிமன்ற தீர்ப்பெல்லாம் பொய்யானதா? நளினி பொய் சொல்கிறார். இதை உலகிற்கு தெரிவிக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பை கூட்டுகிறேன். நிகழ்விடத்தில் தான் இல்லை என்றும் இந்திரா காந்தி சிலைக்கு அருகில்தான் இருந்தேன் என நளினி 2வது பொய்யை சொல்கிறார்.

புகைப்பட ஆதாரம்
எதுக்கு நளினி அங்கே வந்தார்? யாரோடு வந்தார்கள்? எத்தனை மணிக்கு வந்தார்கள்? அவர்கள் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர்களா? இரவு 10.20க்கு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் நேரத்தில் நளினிக்கு இந்திரா காந்தி சிலை அருகே என்ன வேலை?" என்று கூறி அவர், நளினி பொதுக்கூட்டத்தில் அமர்ந்திருப்பதாக நாளிதழில் வெளியான புகைப்படத்தை காட்டினார்.

விடுதலை புலிகள்
தொடர்ந்து பேசிய அவர், "நளினியும் சுபாவும் ஓடும் நிலையில் உள்ளார்கள். சுபா விடுதலைப்புலியை சேர்ந்தவர். அவரோடு நளினிக்கு என்ன வேலை? ஒற்றைக்கண் சிவராசன் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியினருடன் நின்றார்கள். நான் நளினியை 6 மணிக்கு பார்த்த சாட்சியத்தை சிபிஐயிடம் தெரிவித்து உள்ளேன். காஞ்சிபுரத்தின் ஒரே ஒரு உதவி ஆய்வாளர் நான்தான்.

மைசூர் சில்க்
வரக்கூடிய பெண்களை நான் அழைத்து அங்கு அமர வைத்தேன். அப்போது 10 பெண்கள் அழுக்கு துணியோடு வருகிறார்கள். அவர்கள் முதலிடத்தில் போய் அமர்கிறார்கள். அப்போது சுபாவும், நளினியும் மைசூர் சில்க் புடவை உடுத்தி வருகிறார்கள். அந்த காலத்தில் இது விலை உயர்ந்த புடவை. ஒரு பெண் என்பதால் நான் அதை வியந்து பார்த்தேன். விஐபியாக இருப்பாரோ என்று நினைத்தேன்.

முருகனை ஏன் காதலித்தார்?
அவர்களிடம் போய் முன்னால் சென்று அமர சொன்னேன். அவர்கள் மேடை அருகே கைநீட்டி ஏதோ பேசினார்கள். மீண்டும் அவர்கள் அருகே நான் சென்று அமர சொன்னேன். உடனே என்னை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். நளினிக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பில்லை என்றால் ஏன் அந்த அமைப்பை சேர்ந்த முருகனை காதலிக்க வேண்டும்? சிறையில் காதலித்தீர்களா? முருகனை எப்போது திருமணம் செய்தார்?

விடுதலை புலிகளுக்கு அடைக்கலம்
நளினிதான், முருகன் மற்றும் விடுதலை புலிகளை அழைத்து வந்து சாப்பாடு வழங்கி, விபி சிங் கூட்டத்துக்கு சென்று ஒத்திகை பார்த்தார். விடுதலை புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வழிகாட்டினார். எனவே இவர்தான் முதல் குற்றவாளி. நளினி உதவாமல் இருந்திருந்தால் இந்திய பிரதமர், 9 போலீஸ் அதிகாரிகள், 6 மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்." என்று அனுசுயா ஆவேசமாக தனது பேட்டியில் தெரிவித்தார். இதனிடையே நளினி பேட்டிகள் அளித்து வருவது அவருக்கு எதிராகவே திரும்பும் என்றும், அவரை குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என்பதால், அமைதியாக போவது நல்லது எனவும் நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications