ஆளுநராக நீடிக்க தார்மீக தகுதி இல்லை.. ஆர்.என்.ரவியே! ராஜ்பவனை விட்டு வெளியேறுக- வைகோ சீற்றம்
சென்னை: தமிழ்நாடு அரசின் வழக்கில், ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது; ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2023 அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததின் மூலம் சட்டமன்றம் தனது கடமைகளைச் செய்ய ஆளுநர் தடுக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார்.

எதிரியாக செயல்பட்ட ஆளுநர் ரவி
இதன்மூலம் அரசியலமைப்பு சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளைத் தமிழக ஆளுநர் நிறைவேற்றவில்லை. மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத் தாமதிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆளுநரின் இத்தகைய செயல் சட்டப்படி தவறு. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததின் மூலம் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். ஆளுநரின் இத்தகைய செயல் தன்னிச்சையானது மற்றும் அர்த்தமற்ற செயல் ஆகும். ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் எதிரி போல் செயல்படுகிறார்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.
10 மசோதாக்களுக்கும் ஒப்புதல்
குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பிவைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம், இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தது சட்டவிரோதம் என்றும், ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக உள்ளது என்றும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை, ஆளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரங்கள் இல்லை, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
ராஜ்பவனை விட்டு வெளியேறு!
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர் என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். உ டனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
அமித்ஷாக்களுக்கும் ஆப்பு
விடுதலை க.ராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம்: ஆளுநர்களின் அதிகார திமிருக்கும் அவர்களை ஆட்டிவைத்த அமித்ஷாக்களுக்கும் ஆப்பு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். கிடப்பில் போட்ட மசோதாக்களை செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடிகளை சந்தித்த ஆளுநர் ரவிக்கு இப்போது உச்சநீதிமன்றமும் கருப்புக் கொடி காட்டி இருக்கிறது. "நான் கிடப்பில் போட்டுவிட்டால் மசோதா இறந்து விட்டது என்று திமிர் பேசினார் ரவி". கிடப்பில் போட உனக்கு ஏது அதிகாரம் என்று கேட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
தந்தை கருணாநிதி போல..
அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தார் கருணாநிதி. அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் இறையாண்மையை மீட்டுத் தந்து இருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். மாநில உரிமைக்கு மகுடம் சூட்டி இருக்கிறார். தமிழ்நாடு அரசு கம்பீரமாக சிரிக்கிறது. இப்போது அழுதுக் கொண்டிருப்பவர்கள் அமித்ஷாவும் மோடிகளும் தான். திராவிடம் போராடும்! திராவிடம் வெல்லும்! இவ்வாறு விடுதலை ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்திய ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்றும் நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறிவந்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். இதன்மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications