டிஐஜி வீட்டுக்கு பக்கத்திலேயே அட்டூழியம்.. சென்னை தொழிலதிபர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை! ஷாக்!
சென்னை: சென்னை முகப்பேரில் டி.ஐ.ஜி வீட்டுக்கு அருகே அமைந்துள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் 200 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் நெளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவக்குமார். இவர் எஸ்பி கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த நிலையில், நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

வீட்டின் தேக்கு மர கதவை பாறாங்கல் வைத்து உடைத்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து, பீரோவை உடைத்து, அதில் இருந்த 200 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய சிவகுமார், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்து 200 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
கொள்ளை நடந்த இந்த வீடு உள்ள பகுதியில் தான் பல முக்கிய பிரமுகர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளன. டிஐஜி வீடும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளது. டிஐஜி வீட்டின் அருகே நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications