என்னை தூங்கவிடாமல் செய்த அந்த 3 விஷயங்கள்! ஆம்ஸ்ட்ராங்கை கொன்றது ஏன்? அஸ்வத்தாமன் வாக்குமூலம்
சென்னை: மூன்று விஷயங்களால் மன உளைச்சல் ஏற்பட்டதால் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தேன் என போலீஸ் விசாரணையில் ரவுடி அஸ்வத்தாமன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதே வேளையில் அவருடைய தந்தை ரவுடி நாகேந்திரன் போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருக்கே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என இந்த வழக்கில் அடுத்தடுத்து சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது போல் இதுவரை 23 பேர் வரை கைது ஆகியுள்ளனர். இவர்களை போலீஸார் ஒவ்வொருவராக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது போலீஸ் காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளனர்.
இவர்களிடம் தனித்தனியாகவும் நேருக்கு நேர் வைத்தும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
அந்த தகவல்களை அடிப்படையாக வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் என்பவரை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர் தாய்லாந்தில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளாராம். அதாவது ஆம்ஸ்ட்ராங்குடன் இணக்கமான சூழலை கடைப்பிடித்துள்ளார். அவரிடம் போய் "உங்களுக்கும் அப்பாவுக்கும்தானே முன் விரோதம். நான் இணக்கமாக செல்ல விரும்புகிறேன்" என்று ஆம்ஸ்ட்ராங்கை அங்கிள் என்றே அழைத்தாராம் அஸ்வத்தாமன். அவருடன் நட்புடன் இருப்பது போல் நடித்ததாகவும் மாமூல் , அரசியல் எதிர்காலம் என அனைத்துமே பூஜ்ஜியம் ஆகிவிடும் என்பதால் நாகேந்திரனிடம் கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சொன்னாராம் அஸ்வத்தாமன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த 4 நாட்களாக அஸ்வத்தாமனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் கூறுகையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அருள் எங்களை அணுகினார். அப்போது நான் அப்பாவிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என கூறினேன். அதன் பிறகு அனைத்தும் நல்லவிதமாக முடிந்தால் கண்டிப்பாக கொலை வழக்கில் கைது செய்யப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த கொலைக்கு அஸ்வத்தாமன் ஏன் ஒப்புக் கொண்டார் என்பதற்கான மூன்று காரணங்களை கூறியுள்ளார். அதில் ஒரக்காடு நிலப்பிரச்சினையில் என்னை உள்ளே நுழைய விடாமல் ஆம்ஸ்ட்ராங் தடுத்தார். இதனால் எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டது. மேலும் மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் ஆம்ஸ்ட்ராங் தூண்டுதலின் பேரில் அவர் போலீஸில் புகார் அளித்தார்.
அந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். அது எனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது. அது போல் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் எனது தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்துள்ளனர். அவருக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் தூண்டுதலால்தான் என் தந்தை சிறைக்குச் சென்றார். எனது வாழ்விலும் எனது தந்தை வாழ்விலும் குறுக்கே வரும் ஆம்ஸ்ட்ராங்குடன் எனக்கு முன்விரோதம் ஏற்பட்டது. இதனால்தான் அருள் என்னை அணுகிய போது நான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தேன் என அஸ்வத்தாமன் தெரிவித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications