ஓவர்.. ஓவர்! 1.06 கோடி பெண்கள் அக்கவுண்டிற்கும் ரூ.1000 செலுத்தப்பட்டு விட்டது.. தமிழக அரசு தகவல்!
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் தலா ரூ.1000 செலுத்தப்பட்டு விட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

2023-24ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. அடுத்த நிதி ஆண்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. திமுக அறிவித்தபடி இந்த திட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்கினார். தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் நேற்று பிற்பகல் முதல் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தால் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பெண்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். குறிப்பாக கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும், சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்களுக்கும், ஒரு வேலை சாப்பிடுவதற்கே அல்ல்படும் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும். கைச்செலவுக்கு ஆண்களை எதிர்பார்க்காமல் பெண்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இந்த ஆயிரம் ரூபாய் உதவும்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான நிதியுதவி திட்டமல்ல; பெண்களுக்கான உரிமை திட்டம் என கூறி மகிழ்கிறது தமிழக அரசு. மகளிரின் சமூக பொருளாதார நிலையை உயரச் செய்து, பெண்கள் சுயமரியாதையும் பொருளாதார விடுதலையையும் பெற வழிவகுக்கும் என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது தமிழக அரசு.
முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததும், இந்த மாதத்துக்கான உரிமைத் தொகை தகுதியான அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கும் சென்றுள்ளது. அதாவது பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 பணம் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 15ஆம் தேதி உரிமைத் தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வங்கிக்கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டதாக தங்களது செல்போன்களில் வந்த மெசேஜை பார்த்து மகிழ்ந்த பெண்கள், இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் தலா ரூ.1,000 செலுத்தப்பட்டு விட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கலைஞர் உரிமைத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாதந்தோறும் 1ஆம் தேதி அல்லது மாத இறுதிகளில் ஊழியர்களுக்கு வங்கிக் கணக்குகளில் சம்பளம் வரவு வைக்கப்படும் என்பதால், அப்போதைய தொழில்நுட்பச் சிக்கல்களை கவனத்தில் கொண்டு 15ஆம் தேதி, ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications