கோயம்பேட்டில் ஆக்கிரமிப்பு.. கோவிலுக்கு சொந்தமான 13 கோடி கட்டிடம் மீட்பு.. நேரில் சென்ற சேகர்பாபு
சென்னை: சென்னை அரும்பாக்கம் உத்தனாச்சியம்மன், மங்களேசுவரர் மற்றும் பால விநாயகர் கோவிலுக்கு சொந்தமான கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ள ரூ.13 கோடி மதிப்பிலான 8 ஆயிரத்து 742 சதுர அடி வணிக மனை மற்றும் கட்டிடம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால் அண்மையில் மீட்கப்படடிருந்தது. இந்நிலையில் கோயம்பேடு சென்ற அமைச்சர் சேகர்பாபு அந்த இடத்தை அண்மையில் ஆய்வு செய்தார்.
இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் சீராய்வுக் கூட்டங்களின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் சட்டசபை அறிவிப்புகளின் பணி முன்னேற்றத்தை ஆய்வு செய்யும்போது கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணிகளுக்கு தனி முக்கியத்துவம் அளித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துகிறார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 1,038 கோவில்களுக்கு சொந்தமான ரூ.8,015.80 கோடி மதிப்பீட்டிலான 7,930.34 ஏக்கர் நிலங்கள் ஆக்கிமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியோடு கோவில்களுக்கு சொந்தமான 2 லட்சத்து 15 ஆயிரத்து 385 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 820 எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே அமைச்சர் சேகர்பாபு, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சென்னை, அரும்பாக்கம் உத்தனாச்சியம்மன், மங்களேசுவரர் மற்றும் பால விநாயகர் கோவிலுக்கு சொந்தமான கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ள ரூ.13 கோடி மதிப்பிலான 8 ஆயிரத்து 742 சதுர அடி வணிக மனை மற்றும் கட்டிடத்தை கடந்த அக்டோபர் 1-ந்தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர், மண்டல இணை கமிஷனர் எஸ்.மோகனசுந்தரம், உதவி கமிஷனர் கி.பாரதிராஜா மற்றும் செயல் அலுவலர்கள் உடனிருந்தனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரூ. 7,132 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தார். அதன்பிறகு பல்வேறு இடங்களில் கோயில் நிலங்கள் மீட்கப்படடது. திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 1.40 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 100 கோடியாகும்.












Click it and Unblock the Notifications