ரூ.200, 500 நோட்டுகளுக்கு கிரீன் சிக்னல்.. நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: கடந்த 10 வருடங்களாக காத்திருந்த தடைக்கு ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளது.. நேபாளம் செல்லும் இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ரூ.200, ரூ.500 நோட்டுகள் புழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுற்றுலா துறை, வர்த்தகர்கள் எல்லாம் நிம்மதி அடையும் அளவுக்கு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது..
இந்தியாவில் சிறிய மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுவதாக ரிசர்வ் வங்கிக்கு, அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது..

கிராமப்புறங்கள்
அந்தக் கடிதத்தில், நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் கிட்டத்தட்ட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் தாராளமாக உள்ளன. ஏடிஎம்களிலும் அதிக மதிப்புள்ள நோட்டுகளே கிடைக்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முழுமையான மாற்றாக அமையாது என்றும், நாணயங்களின் பற்றாக்குறையால் மாற்று முயற்சிகள் தோல்வியடைந்து விட்டது" என்றும் விலாவரியாக கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், நேபாளம் செல்லும் இந்திய பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.. 10 ஆண்டுகளாக நீடித்திருந்த ஒரு முக்கியமான தடைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது...
ரூ.200, 500 ரூபாய்
ஆமாம், இதுவரை தடை செய்யப்பட்டிருந்த ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை, இனிமேல் நேபாளத்திற்கு கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்திய சுற்றுலா பயணிகளுக்கு செம குஷியை தந்து வருகிறது.. அதேபோல நேபாளத்தின் சுற்றுலா மற்றும் வர்த்தக துறைகளுக்கும் மிகப்பெரிய பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியொரு ஹேப்பி தகவலை, நேபாள அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சரும், அரசின் செய்தி தொடர்பாளருமான ஜகதீஷ் காரெல் உறுதிப்படுத்தியுள்ளார்...
ஏற்றுமதி, இறக்குமதி
இதுகுறித்து அவர் சொல்லும்போது, "ரூ.200, ரூ.500 மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது..
அதேசமயம், இந்தியா - நேபாளம் இடையே எடுத்து செல்லக்கூடிய பணத்தின் உச்சவரம்பு மாற்றமின்றி ரூ.25000 ஆகவே நீடிக்கும்.. அதாவது, இந்திய அல்லது நேபாள குடிமக்கள் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.25000 வரை இந்திய ரூபாய் நோட்டுகளை 2 நாடுகளுக்கும் இடையே கொண்டு செல்ல முடியும். இந்த அனுமதியானது நவம்பர் 9, 2016க்கு பிறகு வெளியிடப்பட்ட ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளுக்கும் பொருந்தும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் - சுற்றுலா பயணிகள்
கடந்த 2016ல் இந்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த பிறகு, ரூ.100க்கு மேல் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்தியா - நேபாளம் இடையே திறந்த எல்லை இருப்பதால், இந்த தடை கடந்த 10 வருடங்களாகவே பல சிக்கல்களை உருவாக்கி விட்டது..
குறிப்பாக, இந்திய சுற்றுலா பயணிகள் சிறிய நோட்டுகள் தேடி அலைந்ததும், பணத்தை மாற்றுவதில் அதிக சிரமம் ஏற்பட்டதும் வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், 2015ம் ஆண்டின் அந்நிய செலாவணி விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி மாற்றங்களை செய்து, உயர்மதிப்பு இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்திற்கு கொண்டு செல்ல அனுமதி அளித்தது. இதையடுத்து, நேபாள அரசும் நீண்ட காலமாக இருந்த தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது..
பச்சை சிக்னல்
இந்த அதிரடி அறிவிப்பானது, நேபாளத்துக்கு அடிக்கடி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள், வணிகர்களுக்கு பெரிய நிம்மதியை, மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இந்திய சுற்றுலா பயணிகள் இனிமேல் தாராளமாக செலவு செய்ய முடியும்.. இதனால் நேபாளத்தின் சுற்றுலா துறையும் மீண்டும் உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாள அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதுமே, நேபாள ராஷ்டிர வங்கி இதற்கான சுற்றறிக்கையை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... ரூ.200 மற்றும் ரூ.500 இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் முழுமையாக சட்டபூர்வமாகும். இந்திய பயணிகளுக்கு இது உண்மையிலேயே ஒரு ஹேப்பி நியூஸ்தான்...!!












Click it and Unblock the Notifications