பொங்கல் கிப்ட் + ரூ.1000... மகளிர் உரிமைத் தொகை எல்லாருக்கும் வராதா? தமிழக அரசு சொன்ன "ஹோப்" நியூஸ்
சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், உரிமைத்தொகை குறித்த மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்றும், இதற்கான புதிய விண்ணப்பங்களும் அளிக்கப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

2 மாதங்களுக்கு முன்பு, இந்த திட்டத்தில் இணைவதற்காக மொத்தம் 11.8 லட்சம் பேர் மறுவிண்ணப்பம் தந்துள்ளனர்.. இதில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் மறுபடியும் பரிசீலனை செய்யப்படுகிறது. இதுபோலவே, இந்த ஜனவரி மாதமும் கூடுதலாக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாகவும், இதில் தகுதியான நபர்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பரிசீலனை: அதுமட்டுமல்ல, உரிமைத் தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள் மற்றும் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்ட பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் இருக்கும் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டும் வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் உரிய பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக முன்கூட்டியே உரிமை தொகையை வழங்கியிருக்கிறது தமிழக அரசு.
இந்நிலையில், தமிழகத்தில் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என விண்ணப்பித்துள்ள 11லட்சத்து 85 ஆயிரம் பெண்களுக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சக்கரபாணி: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.. பின்னர் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
"தமிழக மக்களின் நலன்கருதி, மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுவரை 1 கோடியே 60 லட்சத்து 5 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 7லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்: அதேபோல், உரிமைத்தொகை பெற தகுதியிருந்தும், கிடைக்கப்பெறாத 11லட்சத்து 85 ஆயிரம் குடும்பத் தலைவிகள் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். விரைவில் அவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க 8 தாசில்தார், 101 துணை வட்டாட்சியர் ஆகியோரை நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications