ரூ.15,000 மானியம் தரும் தமிழக அரசின் சூப்பர் சான்ஸ்.. சேலத்தில் விவசாயிகள் ஹேப்பி.. வந்தது அறிவிப்பு
சென்னை: தமிழக விவசாயிகளின் நலனில் அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.. அவர்களின் வாழ்வியலுக்காக பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், பம்பு செட் குறித்த திட்டமானது, விவசாயிகளின் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. சமீபத்தில் சேலம் விவசாயிகளுக்கு சோலார் மோட்டார் பம்ப் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், மீண்டும் ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக் கூடிய சோலார் நடைமுறையும் அமலில் உள்ளது.. சுற்றுச்சூழலையும் பாதிக்காத வகையில் இந்த திட்டம் இருப்பதால், சோலார் நடைமுறையை விவசாயத்திலும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதற்காகவே, 3 வருடங்களுக்கு முன்பு முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் (Chief Minister's Solar Power Pump Set Subsidy Scheme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சோலார் பம்புசெட்டுகள் அமைத்து தரப்படுகிறது.
சோலார் பம்பு செட்டுகள் திட்டம்
இதனால் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, கிணற்றுப் பாசனத்தையும் விவசாயிகளால் எளிதாக மேற்கொள்ள முடியும். சமீபத்தில் சேலம் மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு அழைப்பு வெளியிட்டிருந்தார்.
அதில், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் மின் கட்டமைப்புடன் சாராத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட விலையில் அரசு மானியத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டு வருவதால், அதனை பெற்று பலனடையுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை
சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினை சார்ந்த சிறு, குறு, விவசாயிகளுக்கு 80% மானியத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பொதுப் பிரிவினைத் சார்ந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த இதர விவசாயிகளுக்கு 70% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 60% மானியத்தில் வழங்கப்படுவதாகவும் கலெக்டர் அறிவித்திருந்தார்.
சேலம் மாவட்ட விவசாயிகள்
இப்போது மீண்டும் சேலம் விவசாயிகளுக்கு அழைப்பு வந்துள்ளது.. குறைந்த விலையில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாடகைக்கு விடப்படுவதால் அவைகளை பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
காரணம், குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகள் பயன்படுத்தி வருவதால், மின் நுகர்வு அதிகமாவதுடன், பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் மிச்சமாகி, மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு பழுதாகிவிடுகிறது. இந்த குறைகளை தவிர்க்கவே, புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கான மானிய உதவியையும், அரசே கொடுத்து உதவுகிறது. இதனால், பழைய பம்புசெட்டுகளை மாற்றி, புது பம்புசெட்டை விவசாயிகள் அமைத்து கொள்ள முடியும்.
குறைந்த விலையில் பம்ப்செட்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு, குறைந்தபட்சம் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும், மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.15,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகையே பின்னேற்பு மானியமாக தரப்படும்,
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 1000 பம்பு செட்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றெல்லாம் விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க தற்போது மானியம் வழங்கப்படுகிறது.. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்யேகமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
கலெக்டர் அறிவிப்பு
அதில், தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக செயல்படுத்தி வருகிறது.
நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைப்பதற்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் பம்ப்செட் வாங்கிட ரூ.15,000/- அல்லது மின்மோட்டார் பம்ப்செட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
4 நட்சத்திர தரம் கொண்ட மோட்டார் பம்பு
புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் பம்புசெட்டுகளை வாங்கிட விவசாயிகளுக்கு ரூ.15,000/- அல்லது மின் மோட்டார் பம்புசெட்டின் மொத்த விலையில் 50% இவற்றுள் எது குறைவோ அத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
பழைய பம்பு செட்டுகளுக்கு மாற்றாக புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின்சார மோட்டார் பம்பு செட்டுகளும், புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுக்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் பம்பு செட்டுகளும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு தோட்டக்கலை முகமை
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றவும், மின்சாரவாரியத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட குதிரைத்திறன் அல்லது அதற்கு குறைவான குதிரைத்திறன் கொண்ட திறன்மிகு பம்புசெட்டுகள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது
புதிதாக ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு, திறந்த வெளிகிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகள், விவசாயிகள் ஏற்கனவே தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர்ப்பாசன அமைப்பு நிறுவியுள்ள விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர்ப்பாசன அமைப்பு நிறுவிட தகுதி உடையவர்களாவர். விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications