நிலம் வைத்திருப்போருக்கு ரூ.480 மானியம்.. சிறுதானியங்களுக்கு ரூ.65 கோடி மான்யம்.. விவசாயிகள் ஹேப்பி
சென்னை: விவசாயிகள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வரும் மத்திய அரசும், தமிழக அரசும், முக்கிய அதிரடி ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.. சிறுதானியங்களுக்கான மானியம் குறித்த இந்த அறிவிப்பானது, விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவில் சிறுதானியங்களுக்கான முக்கியத்துவமும், பயன்பாடும் பெருகியபடியே வருகிறது.. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, கடந்த வருடத்தை, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக, ஐநா சபையும் அறிவித்திருந்தது.

உலகின் சிறுதானியங்கள் உற்பத்தியில், இந்தியா, 5வது இடத்தில் உள்ளது. உற்பத்தியில் முன்னேற்றம் அடைவதற்காக, தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்களில் உள்ள, 212 மாவட்டங்களில், சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் பணிகளை, மத்திய அரசு கையில் எடுத்து வருகிறது..
அதனால்தான், சிறுதானிய ஆண்டு தொடர்பாக விவசாயிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், லோகோவை மத்திய அரசு கடந்த வருடம் வெளியிட்டுள்ளது. இதில், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றின் வரைபடங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதன்கீழ், ஆங்கிலத்தில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு என்ற வாசகம் இடம் பெற்றிருந்த நிலையில், இதனை தமிழில் மாற்றி, வேளாண் துறையினர் வெளியிட்டிருந்தனர்.
சிறுதானியங்கள்: நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இங்கு விளையும் கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.. சிறுதானியங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைத்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டுதான், தமிழகத்தில் சிறுதானிய இயக்கத்தை வேளாண் துறை துவங்கப்பட்டு, இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில், கிட்டத்தட்ட 1.11 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றிருந்ததால், வருகிற 2028ம் ஆண்டு வரை இந்த திட்டத்தை தொடர அரசு முடிவு செய்துள்ளதாகவும், நடப்பாண்டு மானிய உதவிகளுக்காக, 65 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
உழவன் செயலி: அதுமட்டுமல்ல, இந்த மானியத்தை விவசாயிகள் உழவன் மொபைல் செயலியில் முன்பதிவு செய்து கொண்டு பலன் பெறலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் சிறுதானிய இயக்கம் தற்போது 25 மாவட்டங்களில் செயல்பட்டு வரும்நிலையில், இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் குழு உருவாக்குவதற்காக 1000 ரூபாய், சிறுதானிய தொகுப்புகளை உருவாக்க, பழங்குடியின விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 840 ரூபாய், மற்ற விவசாயிகளுக்கு, 600 ரூபாய், இயற்கை உரங்கள் வாங்க, ஏக்கருக்கு, 480 ரூபாய் மானியம் தரப்படுகிறது.
முன்பதிவு செய்யலாம்: இந்த மானியத்தை பெற வேண்டுமானால், விவசாயிகள், உழவன் மொபைல்போன் செயலியில் முன்பதிவு செய்யலாம். அல்லது உதவி வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி இயக்குனர்களையும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications