பிரவீன் சக்கரவர்த்திக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக இருக்கு.. செல்வப்பெருந்தகை
சென்னை: பிரவீன் பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக இருப்பதாகவும், பிரவீன் சக்கரவர்த்தி குறித்து காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்து இருக்கிறேன் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி அளித்தார். காங்கிரஸ் பாரம்பரியம் தெரியாத பிரவீன் சுயவிளம்பரத்துக்காக இப்படி பேசுகிறார். காட்டாட்சி நடத்தும் உத்தரபிரதேசத்தோடு தமிழ்நாட்டை எப்படி ஒப்பிட முடியும் என்றும் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பிரவீன் சக்கரவர்த்தி பேசியது குறித்தும் கருத்து தெரிவித்தார். செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

பாஜகவின் குரலாக பேசுவதை ஏற்க முடியாது..
உத்தர பிரதேசத்தையும், தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பேசுவது எப்படி சரியாக இருக்கும். உத்தரபிரதேசம் புல்டோசர் ஆட்சி. அங்கு ஏழை, எளிய மக்களை புல்டோசர் வைத்து தாக்குகிறார்கள். அப்படி என்றால் யோகி ஆதித்யநாத் குரலாக பேசுகிறாரா? உத்தர பிரதேச புள்ளி விவரங்களை சொல்கிறார்.. அது உண்மையா.. கிடையாது.. பிரவீன் சக்கரவர்த்தி சொல்லிய புள்ளி விவரம் தவறு.. அதனை நான் மறுக்கிறேன்.
4.6 சதவீத கடனில் தமிழகத்தை விட்டு சென்றது அதிமுக. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்து 3 சதவீதமாக குறைத்து இருக்கிறார்களே அது தானே திமுக ஆட்சி. இது தானே மேன்மையான மக்களுடைய ஆட்சி. காங்கிரஸில் இருந்து கொண்டு பாஜகவின் குரலாக பேசுவதை ஏற்க முடியாது.. எப்படி யோகி ஆதித்யநாத்தை உயர்த்தியும், பாஜகவை உயர்த்தியும் பேச முடியும்.
தலைமையிடம் புகார் தெரிவித்து இருக்கிறேன்
யோகி ஆதித்யநாத் சொல்வதை பிரவீன் சக்கரவர்த்தி ஆதரிக்கின்றாரா? 2021-க்கு பிறகு உற்பத்தி திறன் அதிகம் ஆகியுள்ளது. அதை ஏன் சொல்லவில்லை. உபியில் காட்டு தர்பார் நடக்கிறது. கேள்வி கேட்டால் சிறை.. புல்டோசர் தான்.. அந்த ஆட்சியை போய் எப்படி நல்ல ஆட்சி என்று சொல்ல முடியும். அவரது பேச்சுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ், பாஜக தான் இருக்கிறது.
பிரவீன் சக்கரவர்த்தி குறித்து நான் காங்கிரஸ் தலைமையிடம் புகார் தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறேன். பாஜகவை ஆதரித்து பேசுபவர்கள் தமிழ்நாட்டில் ஒருசிலர் இருக்கிறார்கள். நேற்று, அதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் குறித்து கடிதம் எழுதியிருக்கிறேன். அவர்கள் முடிவுக்கு வருவாங்க. தான் வளர்ந்து கொள்வதற்காக, தன்னுடைய புகழை வளர்த்துக்கொள்வதற்காக சிலர் இப்படி பேசுகிறார்கள்.
பெரிதுபடுத்த வேண்டாம்
நான்றகரை ஆண்டுகள் மட்டுமின்றி 4 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி கூட்டணியாக இருந்து வருகிறோம். ஒரே நாளில் கூட்டணி பற்றி முடிவு எடுத்து விடமுடியாது. அவங்க கருத்தை அவங்க சொல்வாங்க.. எங்க கருத்தை நாங்க சொல்வோம். கலந்து பேசி கட்சி தலைமை முடிவை அறிவிக்கும். அதை விட்டுவிட்டு அங்க போகப்போறாங்க.. இங்க போகப்போறாங்க என்பதை எல்லாம் ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது.
பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். காங்கிரஸ் தலைமை விரைவில் முடிவை அறிவிக்கும். இந்தியா கூட்டணி உடைந்துவிடும் என நயினார் நாகேந்திரன் மட்டுமில்லாமல் அண்ணாமலையும் பகல் கனவு காண்கிறார்கள்.. அது ஒரு போதும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications