தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி.. காவல்துறை விதித்த 12 நிபந்தனைகள்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை தரப்பில் கடும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு இருந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனக் கருதி தமிழக காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சில கட்டுப்பாடுகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நட்டில் 45 இடங்களில் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. சென்னையில் மாநகர காவல்துறை எல்லைக்கு உள்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறவில்லை. ஆர் எஸ் எஸ் பேரணிக்கு கடும் கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. 12 நிபந்தனைகளும் விதித்துள்ளது. காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் வருமாறு:-
* ஆர்எஸ்எஸ். ஊர்வலத்தின் போது தனி நபர்கள் குறித்தோ, சாதி-மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் கருத்து கூற கூடாது.
* இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துகளையும் வெளிப்படுத்தக்கூடாது.
*நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்தவித செயல்களையும் செய்யக்கூடாது.
* பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.
* ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்தி செல்ல கூடாது.
* ஊர்வலகத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்ற ஏற்பாடுகளை போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும்.

* அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இடது புறமாக மட்டுமே செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஊர்வலம் செல்ல பயன்படுத்த வேண்டும்.
* போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், ஊர்வலத்தை ஒழுங்குப்படுத்தவும் காவல்துறைக்கு உதவும் வகையில் ஏற்பாட்டாளர்கள் சார்பில் போதுமான அளவுக்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.
* காவல்துறை அனுமதி வழங்கிய வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்வதை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* பெட்டி வடிவிலான ஒலிப்பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சப்தம் 15 வாட்ஸ்களுக்கு அதிகம் இருக்க கூடாது. கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது.
* ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாசாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
* பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
* இந்த கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை ஊர்வலத்தில் செல்பவர்கள் எக்காரணத்தை கொண்டும் மீறக்கூடாது. மீறினால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications