கோர்டில் ஆஜரான நடிகர் எஸ்ஜே சூர்யா.. விடாத வாலி பட பஞ்சாயத்து! போனி கபூருடன் என்னதான் பிரச்சனை?
சென்னை: அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் இந்தி உரிமை வழக்கில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, மாஸ்டர் கோர்ட் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்து இருக்கிறார். ஏன் இந்த வழக்கு தொடரப்பட்டது? நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விரிவாக பார்ப்போம்.
தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமாக இருந்து வருபவர் எஸ்ஜே சூர்யா. தொடக்கத்தில் வாலி, குஷி, நியூ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த இவர் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தார். தற்போது ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி என அடுத்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் 1999 ஆம் ஆண்டில் இவர் இயக்கிய வாலி என்ற படம் அஜித்தின் திரைப் பயணத்தில் திருப்பு முனையாக அமைந்து உள்ளது. அஜித், சிம்ரன் நடிப்பில் உருவான இப்படத்தின் இந்தி உரிமையை நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல சினிமா தயாரிப்பாளருமான போனி கபூர் பெற்று இருந்தார். இந்த நிலையில், அதை எதிர்த்து எஸ்ஜே சூர்யா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
ஆனால் கதையானது, அதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்ஜே சூர்யா வழங்கவில்லை என்றும் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் போனி கபூர் இந்தி ரீ மேக்கை துவங்க இடைக்கால அனுமதி வழங்கியது.
இதனை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து எஸ்ஜே சூர்யா உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்ஆர் ஷா முன்னிலையில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற விசாரணையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றுக்கூறி எஸ்ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன் மூலம் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடிகர் எஸ் ஜே சூர்யா நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி கின்ஸ்லி கிரிஷ்டோபர் முன்பாக நேரில் ஆஜராகி, எதிர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அப்துல் ஹமீது நடத்திய குறுக்கு விசாரணைக்கு சுமார் 2.30 மணி நேரம் சாட்சி அளித்தார். பின்னர், வழக்கில் குறுக்கு விசாரணை முடிவடையாததால் மீண்டும் குறுக்கு விசாரணை செய்வதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து நீதிபதி வரும் திங்கட்கிழமை வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications