பெண் பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு கருத்து.. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் இன்று ஆஜர்
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கையும் நெல்லை உள்ளிட்ட நீதிமன்றங்களில் எஸ்.வி.சேகர் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் ஆஜரானார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
மேலும் தான் அந்த சமயத்தில் கண்களில் மருந்து விட்டிருந்ததாகவும் வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு தகவலை படிக்காமல் பார்வேர்டு செய்ததாகவும் தவறான கருத்து அதில் இருப்பதை அறிந்து உடனே டெலிட் செய்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். தான் தவறான கருத்து பதிவிட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில் எஸ்.வி.சேகர் ஆஜராகியுள்ளார்.












Click it and Unblock the Notifications