கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்கிய சைதை நீதிமன்றம்.. ஐகோர்ட்டில் வழக்கு வாபஸ்!
சென்னை : சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார் ஹரிபத்மன்.
திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி
அருண்டேல் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார், பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஏப்ரல் 3ஆம் தேதி அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனு, சைதாப்பேட்டை
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஹரிபத்மன் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்ற காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து பாலியல் தொல்லை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரிபத்மன் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். கண்டிப்பான ஆசிரியரான தன் மீது, பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் ஜாமின் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுள்ளார் ஹரிபத்மன்.

ஹரிபத்மனின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரி பத்மனுக்கு ஏற்கனவே சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாகவும், இதனால் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஹரிபத்மன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதால் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற ஹரிபத்மனுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications