ரூ.10 சாப்பாட்டில் நம்பிய சேலம் ஜனம்! இப்படித்தான் பணத்தை அள்ளினேன்: அன்னை தெரசா அறக்கட்டளை விஜயபானு
சென்னை: 10 ரூபாய்க்கு சாப்பாடு, டீ, உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்து, பயிற்சிக்கு வந்தவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, பண மோசடி திட்டத்தை அறிமுகம் செய்தேன்" என்று அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நிர்வாகி விஜயபானு பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.
சேலம் அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில் பொதுமக்களை ஏமாற்றிய நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், அதன் விசாரணை தீவிரமாகி வருகிறது.

ஆந்திரா, வேலூர் தவிர, சேலத்தில் மட்டுமே 2000க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்திருக்கிறாராம் அறக்கட்டளை நிர்வாகி விஜயபானு. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் 216 நபர்கள், முதலீடாக 4,31,95,500 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்திருக்கிறார்கள்..
அறக்கட்டளை: அந்தவகையில், 119 பேர் மட்டுமே இதுவரை புகார் அவர் மீது அளித்துள்ளனர். மற்றவர்கள் இதுவரை புகார் தராமலேயே உள்ளனர். இந்த அறக்கட்டளையில் பணத்தை இழந்தவர்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளார்கள்..
ஆனால், பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை மீட்டு தர வேண்டும், இல்லாவிட்டால் கைது செய்யப்பட்ட விஜயபானுவை விடுதலை செய்ய வேண்டும், அவரை விடுதலை செய்தால் பணத்தை நாங்களே கொள்கிறோம், காவல்துறையினர் நடத்திய சோதனையால் தான் எங்களது பணம் கிடைக்காமல் உள்ளது" என்று கூறி, விஜயபானுவுக்கு ஆதரவாக சேலத்தில் பொதுமக்கள் 2 நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தியிருந்தனர்.
வாக்குமூலம்: இப்படிப்பட்ட சூழலில், கைதான விஜயபானு, போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலத்தை தந்துள்ளார். விதவிதமான திட்டங்களை அறிவித்து, முதலீடுதாரர்களிடம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக, தன்னுடைய வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
அவரது வாக்குமூலத்தில், "பண மோசடி தொடர்பாக, என் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு, வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு, சென்னை வடபழனி, பூந்தமல்லி காவல் நிலையத்தில், 6 கேஸ்கள் உள்ளன.. இந்த வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளி வந்த பிறகு, பண மோசடி செய்ய சேலத்திற்கு இடம் பெயர்ந்தேன். அங்கு, அம்மாப்பேட்டை என்ற இடத்தில், அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை துவக்கினேன்.
அறக்கட்டளை: என்னுடன் அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயபிரதா, பாஸ்கர், சையது அகமது ஆகியோரை நிர்வாகியாக நியமித்தேன். எங்கள் அறக்கட்டளையில், "இலவசமாக தையல், கணினி, ஆங்கில மொழி கற்று தரப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு டியூஷன், பெண்களுக்கு கூடைப் பின்னல், பாக்குத்தட்டு தயாரிப்பு, மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரிப்பு மற்றும் கைவினைத் தொழில்கள் கற்றுத் தரப்படும்" என்று விளம்பரம் செய்தோம்.
இதனால், சேலம் மாவட்டத்தை சேர்ந்தோர் பலர் எங்களை தேடி வந்தனர். பயிற்சியின்போது, 10 ரூபாய்க்கு சாப்பாடு, டீ மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தோம்.. இப்படி அறிவித்ததுமே நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. அதன் பிறகு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, பண மோசடி திட்டத்தை, அறிமுகம் செய்தேன்.
முதலீடுதாரர்கள்: பொதுமக்களை முதலீடுதாரர்களாக மாற்றினேன்... ஒருவர் 1,000 ரூபாய் முதலீடு செய்தால், ஒன்றரை மாதத்தில், 2,000 ரூபாய்க்கான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்து, அதன்படியே வழங்கினேன்.. முதலீடுதாரர்களையும் நம்ப வைத்தேன்..
பிறகு, ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், 7 மாதங்களுக்கு, தலா, 30,000 ரூபாய் வீதம், 2.10 லட்சம் ரூபாய் தரப்படும். மாதம், 10,000 ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் செலுத்தினால், 750 சதுர அடி காலி மனை வழங்கப்படும். மாதம், 1,500 வீதம், 12 மாதங்களுக்கு,18,000 ரூபாய் செலுத்தினால், 5 கிராம் தங்க நகை வழங்கப்படும்.
சிறப்பு திட்டம்: சிறப்பு திட்டம் என்ற பெயரில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 9 மாதங்களுக்கு தலா, 30,000 ரூபாய் வழங்கப்படும் என்று விதவிதமான திட்டங்களை அறிவித்து, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளேன்" என்று வாக்குமூலம் தந்துள்ளார் விஜயபானு.












Click it and Unblock the Notifications