சானிட்டரி நாப்கின் ரேஷனில் மானிய விலையில் தரக்கோரிய வழக்கு! அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: ரேஷன் கடைகளில், சானிட்டரி நாப்கின்களை மானிய விலையிலோ, இலவசமாகவோ வழங்கக் கோரிய வழக்கில், டிசம்பர் 16 ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், சுகாதாரத் துறை உள்ளிட்ட மூன்று துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெற்று வருகிறார்கள். இதைத்தவிர, ரேஷன் அட்டையின் மூலம் அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்களையும் பெற்று வருகின்றனர்.

ஒரு பாக்கெட் 30 ரூபாய்
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழகத்திலேயே முதல்முறையாக புதுதிட்டம் கடந்த 2023-ல் அறிமுகமானது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே மகாதானபுரம் ரேஷன் கடைகளில், மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் விற்பனை ஆரம்பமானது. "தோழி" என்று சானிட்டரி நாப்கின்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஆறு நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூபாய் 30 விலையில் நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இது வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுவதை விட 25 சதவீதம் விலை குறைவாகும்..
ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமில்லாமல் மற்ற பெண்கள் அனைவரும் நியாய விலைக்கடைகளில் இந்த சுகாதார சானிட்டரி நாப்கினை வாங்கிச் செல்லலாம்... இதன்மூலம் பெண்கள் அதிக தரத்திலான சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர் ஹைகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்..
சானிட்டரி நாப்கின்கள்
அதில், "மாதவிடாய் காலங்களில், பெண்கள் சுகாதாரத்தை பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நாப்கின்'களின் அதிக விலை காரணமாக, ஏழை பெண்களுக்கு 'நாப்கின்'கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், சுகாதார குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
பள்ளிகளில் இலவசமாக, நாப்கின்கள் வழங்க வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து, அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.
ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்
எனவே, தமிழகத்தில் ரேஷன் கடைகளில், 'சானிட்டரி நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் உள்ளதா என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தபோது, அதுபோல எந்த திட்டமும் இல்லை என, பதிலளிக்கப்பட்டது.
அதனால், ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் பயன் அடையும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ , சானிட்டரி நாப்கின்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இந்த மனுவானது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க, அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
3 துறை செயலாளர் ஆஜராக உத்தரவு
இதையடுத்து நீதிபதிகள், "ஏற்கனவே இறுதி அவகாசம் வழங்கியும், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, டிசம்பர் 16ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சமூக நலத் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதாரத் துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும்" என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
பெண்களின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும் சானிட்டரி நாப்கின்களின் தட்டுப்பாடு குறித்த இந்த வழக்கு மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. அத்துடன், பெண்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து அரசு எடுத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications