Radhika Mother: மாமியார் கீதா உடலை சுமந்து சென்ற சரத்குமார்! அம்மா அம்மானு கதறிய ராதிகா, நிரோஷா!
சென்னை: நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா, நிரோஷாவின் தாயுமான கீதா ராதா காலமானதை அடுத்து அவருடைய இறுதி ஊர்வலம் தொடங்கியது. தனது மாமியாரின் உடலை சரத்குமார் சுமந்து வந்து இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றிய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயை பார்த்து ராதிகாவும் நிரோஷாவும் அழுதது பார்ப்போரை கலங்கடித்தது.
இது தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், எனது தாயார் கீதா ராதா (வயது 86) அவர்கள் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போயஸ் கார்டன், சென்னை - 86 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.கீதா ராதாவின் இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி தியாகராஜன், கரு.நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் சீமான், சசிகலா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் அஞ்சலி
அது போல் நடிகர் சிவகுமார், நாசர், நிழல்கள் ரவி, செந்தில், பாக்யராஜ், பொன்வண்ணன், நடிகைகள் ரேகா, நளினி, சோபனா, கீதா, ஸ்ரீபிரியா, பூர்ணிமா, சரண்யா உள்ளிட்டோர் வந்திருந்து ராதிகாவுக்கும் நிரோஷாவுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
இறுதி ஊர்வலம்
இதையடுத்து கீதா ராதாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அவரது உடலை எடுத்துச் செல்லும் வாகனம் பூ அலங்காரங்களுடன் தயாராக இருந்தது. அந்த வாகனத்தில் கீதா ராதாவின் உடலை சரத்குமார் சுமந்து வந்தார். அப்போது ராதிகாவின் அண்ணன்கள் வாசு, ராஜு உள்ளிட்டோர் இறுதி சடங்கிற்காக ஆயத்தமாக இருந்தனர். தனது தாயின் உடலை வாகனத்தில் ஏற்றியதும் அதில் அமர்ந்த ராதிகாவும் நிரோஷாவும் அழுதுக் கொண்டே இருந்தனர். பின்னர் அந்த வாகனம் பெசன்ட் நகரை நோக்கி புறப்பட்டது.
ராதிகாவுக்கு தாய்தான் எல்லாமே
ராதிகாவுக்கு தாய்தான் எப்போதுமே ஊன்றுகோலாக இருந்திருக்கிறார். ராதிகா நடித்துக் கொண்டிருக்கும் போது ரேயன் பிறந்தார். தனக்கு எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் அந்த குழந்தையை வளர்த்தெடுத்தது எல்லாமே கீதாதான். கீதா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ராதிகாவால் இன்று இத்தனை சாதனைகளை செய்திருக்க முடியாது.
ஒவ்வொரு முறையும் ராதிகா தனிப்பட்ட முறையில் நிறைய பிரச்சினைகளை சந்தித்த போதும் அவருக்கு துணையாகவும் ஆறுதலாகவும் இருந்தவர் தாய் கீதாதான். இதை நிறைய தருணங்களில் மகள் ரேயானே சொல்லியிருக்கிறார்.
பாட்டியின் அரவணைப்பு
பாட்டியின் அரவணைப்பில்தான் தான் வளர்ந்தேன். பாட்டியை பேர் சொல்லி அழைத்தால் ராதிகா தன்னை திட்டுவார் என்றும் ரேயான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ராதிகாவின் குழந்தையை மட்டுமில்லை, அவருடைய பேரன் பேத்திகளையும் கீதா பாசமாக வளர்த்தார். ரேயான் தனது கணவர் வீட்டில் இருந்தாலும், ஏதாவது விசேஷங்களுக்கு வீட்டிற்கு வரும் போது பாட்டியுடனும் கொள்ளு பாட்டியுடனும் ரேயானின் குழந்தைகள் நேரத்தை செலவிடும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பார்த்திருக்கிறோம்.
கசப்பு
சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்ய அணுகிய போது கூட அவர் கடந்த கால கசப்புகளை நினைத்து திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்த போது கீதாதான், சரத் நல்லவர், நன்றாக பார்த்துக் கொள்வார் என ஆறுதல் கூறி அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாராம்.
கீதா
கீதா சொன்னது போலவே ராதிகாவுக்கு சரத்குமார் நல்ல கணவனாக இருந்து ரேயானுக்கும் தந்தையாக இருந்து அவரது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். அவரது குழந்தைகளையும் தனது பேரன் பேத்திகளாக கொஞ்சி மகிழ்கிறார். அதே நேரம் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமிக்கும் ராதிகா அண்மையில் திருமணம் செய்து வைத்தார். அதன் பின்னர் தலை தீபாவளி, தலை பொங்கல் என தனது கொட்டிவாக்கம் வீட்டிற்கு வரலட்சுமியையும் நிக்கோலாயையும் வரவழைத்து சீர் செய்து அனுப்பி வைத்தார்.

சினிமா ஷூட்டிங்கில் கூட யார் தன்னிடம் வந்து தேவையில்லாமல் பேசினாலும் தைரியமாக அறைய கூடியவர். ராதிகா என்றாலே தன்னம்பிக்கை, தைரியம், அன்பு, பாசம்தான். அப்படிப்பட்ட மகளை இன்று கண்கலங்க வைத்துச் சென்றுள்ளார் கீதா. அவரது ஆன்மா சாந்தியடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இலங்கை
கீதா, இலங்கையை சேர்ந்தவர். கீதா, ராதிகாவுக்கு மட்டுமில்லை, நிரோஷாவுக்கும்தாய்தான். எம்.ஆர். ராதா அந்த காலங்களிலேயே ரூ 1 லட்சம் ஊதியம் வாங்கினார் என்றால் அதற்கு காரணம் கீதாதான். அவர் குடும்பத்தை பார்த்துக் கொண்டிருந்ததால், எம்.ஆர்.ராதா நிறைய படங்களில் நடித்தார். எம்.ஆர்.ராதாவின் நடிப்பு ராதிகாவிடம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications