சுப்ரீம் கோர்டில் "நமக்கு" சாதகமா தீர்ப்பு வரும்.. வைத்தியலிங்கத்திடம் சசிகலா சொன்னதை கவனிச்சாங்களா
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், இன்று காலை சசிகலா மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சந்தித்துக் கொண்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே அரசியல் குழப்பம் தொடர்ந்து வருகிறது. எடப்பாடி ஒரு தரப்பிலும் ஓபிஎஸ் மற்றொரு தரப்பிலும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்துள்ள போதிலும், ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதிமுக
இப்போது பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் ஓபிஎஸ் பக்கமும் ஓரளவு நிர்வாகிகள் இருக்கவே செய்கின்றனர். இதற்கிடையே கட்சிக்குக் கூட்டுத் தலைமை தான் தேவை என்ற ஓபிஎஸ், பழைய கசப்புகளை மறைந்து அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து இருந்தார்.

எடப்பாடி
ஆனால், இதைக் கண்டுகொள்ளாத எடப்பாடி கட்சிக்கு ஒற்றை தலைமை தான் என்பதில் உறுதியாக உள்ளார். தன்னை மாபெரும் ஒற்றை தலைவராகவும் அவர் முன்னிறுத்திக் கொண்டு இருக்கிறார். நேற்று அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற போதும் கூட அவர் மட்டுமே தனியாக அமர்ந்து இருந்தார். மற்ற மூத்த தலைவர்கள் அனைவருக்கும் அவருக்கு எதிரில் தான் இருக்கை போடப்பட்டு இருந்தது. ஜெயலலிதா பாணியில் எடப்பாடி தனியாகவே அமர்ந்து இருந்தார்.

ஓபிஎஸ்
சமீபத்தில் கூட ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்வீர்களா எனக் கேள்விக்கு எடப்பாடி, "மன்னிப்புக் கேட்டால் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை ரவுடிகளுடன் வந்து அதிமுக அலுவலகத்தைக் கொள்ளை அடித்துள்ளார். அவரை இனியும் எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள். அதிமுக தொண்டர்களின் கட்சியே தவிர, தலைவருக்கான கட்சி இல்லை. எது சாதகமாக இருக்கிறதோ, அதற்கேற்ப மாறிக் கொள்பவர் தான் ஓபிஎஸ். பச்சோந்தியைவிட அதிகமாக நிறம் மாறும் நபர்" என பொரிந்து தள்ளி இருப்பார்.

சசிகலா
அதாவது அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என்பதிலும் எடப்பாடி பழனிசாமி மிக உறுதியாக உள்ளார். எடப்பாடியின் பேச்சுகளில் தொடர்ந்து இதுவே தான் வெளிப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சசிகலாவை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் திடீரென சந்தித்து உள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சசிலா ஒரத்தநாடு வழியாக வந்து கொண்டு இருந்தார்.

சாக்லெட்
அப்போது காவராப்பட்டு கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வைத்தியலிங்கம் திரும்பிய சமயத்தில் நடுரோட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. இருவரும் சந்திக்கும் போது, வைத்தியலிங்கம் அருகே இருந்த ஒருவர், அண்ணனுக்கு இன்று பிறந்த நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கேட்டதும் சசிகலா வைத்தியலிங்கத்திற்கு சாக்லெட் கொடுத்து வாழ்த்தி உள்ளார்.

என்ன சொன்னார்
மேலும், இருவரும் தனியாகவும் சில நிமிடங்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.. முதலில் வைத்தியலிங்கத்தின் குடும்பத்தினர் குறித்த நலம் விசாரித்த சசிகலா, கட்சி நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்துள்ளார். வைத்தியலிங்கம் கட்சியின் இப்போதைய நிலையை விளக்க அதற்கு சசிகலா அமைதியாக, "கவலைப்படதீங்க.. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நமக்குச் சாதகமாக இருக்கும்" என்று கூறியதாகத் தெரிகிறது. எடப்பாடி- ஓபிஎஸ் மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications