ஓபிஎஸ் மகனுக்கு சசிகலா ஆதரவு! "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா" என எடப்பாடி மீது மறைமுகமாக தாக்கு
சென்னை: ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை செயல்பட விடாமல் தடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி விவகாரம் தான் கடந்த சில மாதங்களாகவே முக்கிய பேசுபொருளாக மாறி உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல திருப்பங்கள் அரங்கேறின.
முதலில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அடுத்த ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இருந்து நீக்கச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நீக்கம்
ஓபிஎஸ் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களாகக் கருதப்படும் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் கட்சியிலிருந்து அன்றே நீக்கப்பட்டனர். அதன் பின்னர் சில நாட்களிலேயே ஓபிஎஸ் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 18 பேரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட 22 பேரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இப்படி மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவுக்குத் தெரிவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகளுக்கு எதிராக சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சசிகலா ஆதரவு
ரவீந்திரநாத் அதிமுக எம்பியே இல்லை என்று மக்களவை சபாநயருக்கு ஈபிஎஸ் தரப்பு கடிதம் எழுதி இருந்த நிலையில், கட்சியின் ஒரே ஒரு லோக்சபா எம்பியை செயல்படவிடாமல் தடுப்பதாக ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சசிகலா அறிக்கை
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை, கழகத் தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதிமுக எம்ஜிஆர் என்ற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு பேரியக்கம். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பார்த்துப் பொறாமைப்படும் வகையில் நம் இரு பெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தைத் தனித்துவத்தோடு செயல்பட வைத்தார்கள். ஜெயலலிதா நம்மையெல்லாம் விட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரை நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒரு சில சுயநலவாதிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளால், இன்றைக்கு அதன் சிறப்பு குறைந்து, தன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருவதாகக் கழகத் தொண்டர்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

தொடர் தோல்வி
அதாவது, கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே மிகப்பெரிய ஒரு தோல்வியை இயக்கம் அடைந்தது. இந்த தோல்வி எதனால் அடைந்தோம் என்று சற்று சிந்தித்துப் பார்த்து இருந்தால், அடுத்து நடைபெற்ற தேர்தல்களிலாவது வென்று இருக்கமுடியும். ஆனால் அதுவும் நடக்க வில்லை. இயக்கம் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், கழகத் தொண்டர்களைப் பற்றி கவலையும் படாமல், தன் சுய தேவைகளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு ஒரு சிலரின் செயல்பாடுகளால் தொடர்ந்து அழிவை நோக்கி, இயக்கம் சென்று கொண்டு இருப்பதாக கழகத் தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றியது
ஒரு சிலர் தனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் எண்ணத்தில் பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் அனைவரிடத்திலும் விதைத்து, தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டதோடு மட்டுமில்லாமல், தன்னை சுற்றி இருக்கின்ற சொந்த கட்சியினரையும், ஏன் இன்னும் சொல்லப்போனால் தங்களோடு கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த மாற்றுக் கட்சியினரையும் கூட நம்ப வைத்து ஏமாற்றியது தான் மிச்சம். அதேபோன்று, கட்சியின் நலனைக் காற்றில் பறக்கவிட்டு, எடுத்த தவறான முடிவுகளால், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நமது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, கட்சியின் அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம்.

பிடித்த முயலுக்கு 3 கால்
இந்த சூழ்நிலையில், கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை, கட்சியை விட்டே நீக்குவதும், நாடாளுமன்றத்தில் அதிமுக பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் கழகத் தொண்டர்கள் ஒரு நியாயமற்ற செயலாகத்தான் பார்ப்பார்களே தவிர, ஒரு அறிவார்ந்த செயலாக யாருமே பார்க்கமாட்டார்கள். கட்சிக்கு நல்லது செய்பவர்களா இவர்கள்? அதாவது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்பவர்களை, கழகத் தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
தன் சொந்த விருப்பத்திற்காக, நாடாளுமன்றத்தின் மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை, தன் உடம்பில் உண்மையான அதிமுக ரத்தம் ஓடுகின்ற கழகத் தொண்டர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு, அடிமரத்தை வெட்டுகின்ற வேலையைச் செய்வது எந்த அளவுக்கு அறிவற்ற செயலோ, அதுபோன்று இவர்களது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கழகத் தொண்டர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா.. நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா. நீ எண்ணிப்பாரடா" என்ற பாடலில் வரும் வரிகள் தான் தற்போது நம் நினைவுக்கு வருகிறது. அதாவது,

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி" என்று எம்ஜிஆரின் பாடலிற்கேற்ப நம்மை வளர்த்த நம் இருபெரும் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு மகிழ்ச்சி அளிக்கின்ற வகையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அமைய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். எனவே, கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் இன்றைக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான். அதாவது, இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை எப்படியாவது பதவிகளைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள். இவர்கள் எண்ணம் தவறானது, இயக்கத்திற்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது. உண்மையான கழகத் தொண்டர்களின் பேராதரவோடு, நம் இயக்கம் சீரோடும் சிறப்போடும் செழிக்க இருக்கிறது. இதை யாராலும் தடுக்கவும் முடியாது. அதேபோன்று, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் எண்ணமும் நிச்சயம் ஈடேறும். இதை எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் கண்கூடாகப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்பதையும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications