கடலில் சிலை வைக்க 80 கோடி இருக்கு.. விவசாயிகளுக்கு இழப்பீடு இல்லையா? முடிச்சு போட்டு விளாசிய சசிகலா!
மழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 80 கோடி செலவிட தயாராக இருக்கும் இந்த ஆட்சியாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை அளிக்க தயங்குவது ஏன்? என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும், இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கிடவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகள் வேதனை
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஐந்து லட்சம் ஏக்கர் நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விளை நிலங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் பயிர்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் சொல்லி வேதனை தெரிவிக்கின்றனர். பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பது போல், அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல்லும் மழை நீரில் நனைந்து வீணாவது மிகவும் வேதனை அளிக்கிறது.

நிவாரணம்
டெல்டா விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பாடுபட்டு விளைவித்த பயிரை இழந்து தவிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 35,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், நெல் கொள்முதலில் நெல் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்" எனவும் விவசாயிகள், கோரிக்கை வைக்கின்றனர். இந்த நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனே நிறைவேற்றிட வேண்டும்.

ஹெக்டேருக்கு ரூபாய் 35,000
அதே போன்று, தேவையான இடங்களில், தேவையான நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறந்திடவும், கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வெளிப்படையான கணக்கெடுப்புகள் நடத்தப்படவேண்டும். தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இன்றைய இடுபொருட்களின் விலையேற்றம், உர விலை உயர்வு போன்ற காரணங்களால் ஹெக்டேருக்கு ரூபாய் 35,000 அளவுக்கு விவசாயிகள் செலவிட்டு இருக்கின்றனர்.

பேனாவுக்கு 80 கோடி
எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடலில் பேனா சின்னம் வைக்க 80 கோடி செலவிட தயாராக இருக்கும் இந்த ஆட்சியாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை அளிக்க தயங்குவது ஏன்? எனவே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை உடனே வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications