சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது.. ஓபிஎஸ் கருத்துக்கு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது; சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்ஸின் நிலைப்பாடு. இதனை பல முறை பகிரங்கமாகவும் மேலோட்டமாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இபிஎஸ் அணியோ, சசிகலாவை சேர்க்கவே கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் தெரிவிக்கும் கருத்துகளுக்கு உடனுக்குடன் பதிலடியும் கொடுக்கிறது இபிஎஸ் அணி.

ஓபிஎஸ் சர்ச்சை பேஎச்சு
இந்நிலையில் சென்னையில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே பங்கேற்றனர். இதில் பேசிய ஓபிஎஸ், தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு. இது தொடர்பாக யேசு குறித்த குட்டி கதையையும் கூறினார். ஓபிஎஸ்ஸின் இந்த பேச்சு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ் முகாம் அதிருப்தி
ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் சேர்க்கப் போவது இல்லை; சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் அதிமுகவில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதிமுகவின் ஒருங்க்லிணைப்பாளரான ஓபிஎஸ் மீண்டும் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று பேசி வருவது இபிஎஸ் முகாமை கடும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

சசிகலாவுக்கு நோ மன்னிப்பு
இதனை இன்று சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தினார் இபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஓபிஎஸ்ஸின் கருத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார், தவறு செய்தவர்கள் மனம் திருந்தினால் மன்னிக்கலாம் என்பது பாமரர்களுக்குதான் பொருந்தும். இது சசிகலாவுக்கு பொருந்தாது. சசிகலாவுக்கு அதிமுகவில் மன்னிப்பு என்பதே கிடையாது. சசிகலா இல்லாத அதிமுக நன்றாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த தொடர்புமே இல்லை. ஓபிஎஸ் சொன்ன குட்டிக் கதை சசிகலாவுக்கு பொருந்தாது என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

தொண்டர்கள் சோர்வு
ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் மீண்டும் சசிகலா விவகாரத்தில் மோதலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவும் அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் பேச்சை முன்வைத்து சர்ச்சை வெடித்துள்ளது. இது அதிமுக தொண்டர்களை சோர்வடையவும் செய்திருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications