SBI பேங்க் அக்கவுண்ட் இருக்கா? வங்கிக்கணக்கு மெசேஜ் வந்திருக்கா? சென்னை புளியந்தோப்பில் என்னாச்சு?
சென்னை: வங்கி கணக்குகளில், மோசடி பேர்வழிகளின் கைவரிசை பெருகிவருவதால், பொதுமக்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி வேலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன.

அதுமட்டுமல்ல, யாரிடமும் அவைகளை பகிர வேண்டாம், மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்றும் வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றன.
அட்வைஸ்: மற்றொரு பக்கம் போலீசாரும், பேங்க் மேனேஜர்கள், ஒருபோதும் ஓடிபி கேட்கவே மாட்டார்கள். அதனால், யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. இணைப்பையும் துண்டித்துவிடுங்கள் என்று அறிவுறுத்தியபடியே உள்ளனர் போலீசார்..!
ஆனாலும், மோசடிகளும் அதிகரித்தபடியே உள்ளன.. இதில் ஏமாந்து பணத்தை இழந்தவர்களும் அதிகரித்தபடியே உள்ளனர். கடந்த மாதம் சென்னை அசோக்நகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவரின், பர்ஸை ஒரு நபர் திருடி விட்டார். அந்த பர்ஸிலிருந்த ஆதார் அட்டை, பேங்க் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி, வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதோ இப்போதும் ஒரு சம்பவம் எஸ்பிஐ அக்கவுண்ட்டில் திருடப்பட்டுள்ளது. "உங்கள் வங்கி கணக்கு முடியப்போகிறது?" என்றுதான் பேங்க் மேனேஜர்கள் போல, மர்மநபர்கள் மெசேஜ் செய்து தங்கள் மோசடிகளை துவங்குவது வழக்கம். ஆனால், இங்கே வித்தியாசமாக வங்கியில் இருந்து "ரிவார்ட்" வந்திருப்பதாக மெசேஜ் வந்திருக்கிறது.
சென்னை புளியந்தோப்பு டிம்லர்ஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மென்ட்டில் குடியிருப்பவர் பங்கஜ். 34 வயதாகிறது.. மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.. 2 நாளைக்கு முன்பு, இவரது செல்போனுக்கு எஸ்பிஐ வங்கியில் இருந்து வருவது போன்று ஒரு மெசேஜ் வந்திருக்கிறது.
ஓடிபி நம்பர்: அதில், "உங்களது வங்கி கணக்கிற்கு ரிவார்டு வந்துள்ளது" என்று தகவல் வந்துள்ளது.. பிறகு கொஞ்ச நேரத்தில், பங்கஜின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலம் கேட்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலிருந்து டீடெயில்ஸ் கேட்கவும், பங்கஜ் அதை நம்பி மொத்த விவரத்தையும் பதிவு செய்துள்ளார். உடனே பங்கஜ் செல்போனுக்கு ஓடிபி வந்தது..
அந்த நம்பரை பங்கஜ் பதிவு செய்ததுமே, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டுவிட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பங்கஜ், மிண்ட் பகுதியில் உள்ள தன்னுடைய எஸ்பிஐ வங்கிக்கு சென்று பார்த்தார்.. பணம் பறிபோயிருப்பதை பார்த்து அதிர்ந்து போன பங்கஜ், அதே பேங்கில் புகார் தந்தார்.. பிறகு, புளியந்தோப்பு போலீசிலும் இன்னொரு புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கவனம் மக்களே: வாட்ஸ்அப்களில் வரும் தேவையில்லாத மெசேஜ்களை தொட வேண்டாம், ஓடிபி உள்ளிட்ட விவரங்களை கையாளும்போது கவனமுடன் இருக்க வேண்டும், என சைபர் கிரைம் போலீசார் மறுபடியும் பொதுமக்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications