உச்ச நீதிமன்றம் உத்தரவால்.. தமிழக அரசுக்கு ஜாக்பாட்.. 10 ஆயிரம் கோடி கிடைக்கும்? சர்வே பணி தீவிரம்
சென்னை: கனிமங்கள் மீது வரி விதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலியாக, தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்களாம். அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு 12 தவணைகளில் இந்த வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
கனிம வளங்களுக்கு சுரங்க குத்தகைதாரர்கள் மற்றும் மத்திய அரசிடம் இருந்து வரி மற்றும் ராயல்டி தொகையை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனிம வளத்துறை: தமிழ்நாட்டிற்கு இந்த வரி மூலம் எவ்வளவு தொகை வரும் என்று கனிம வளத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள். அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு 12 தவணைகளில் இந்த வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் முழுமையாக கணக்கெடுப்பு முடிந்தால் தான் எவ்வளவு தொகை என்று தெரிய வரும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இது மட்டும் இன்றி, இனி வரும் நாட்களில் கனிமங்களுக்கு கூடுதலாக விதிக்கப்படும் வரியின் மூலம் வருமானம் கணிசமான அளவில் தமிழக அரசுக்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கிராபைட், சுண்ணாம்புக்கல், மேகனசைட், மார்ல், வெர்மிகுலைட் ஆகிய கனிமங்கள் அதிகளவில் உள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?: கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பது தொடர்பான வழக்குகளில் 1989 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை அளித்திருந்தது. ஆனால் இந்த இரு தீர்ப்புகளும் முரண்பட்டதாக இருந்தன. 1989 ஆம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் vs தமிழ்நாடு வழக்கில் மத்திய அரசு தரும் ராயல்டியும் வரியின் கீழ் வரும் என தீர்ப்பு வந்தது.
அதே வேளையில் கடந்த 2004 ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசுக்கும் கேசோராம் இண்டஸ்ட்ரீஸ்க்கும் இடையேயான வழக்கில் ராயல்டி ஒரு வரி என 1989-ல் சுப்ரீம் கோர்ட் தவறாக குறிப்பிட்டுவிட்டது; ராயல்டி மீதான செஸ்வரி என திருத்தம் செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
மாநிலங்களுக்கு உரிமை: இதற்கிடையில், கனிம வளங்களுக்கு வரி, ராயல்டி வசூலிக்க உரிமை இல்லை என கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிம வள சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. 2011-ல் இதனை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு..
கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் பெறுகிற ராயல்டி தொகையை வரியாக கருத முடியாது. கனிம வளம் உள்ள நிலத்தின் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்குதான் உண்டு. நிலம் என குறிப்பிட்டாலே கனிம வளம் உள்ள நிலத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என 9 நீதிபதிகளில் 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பளித்தனர்.
12 தவணைகளாக வசூலித்து: இந்த தீர்ப்புக்கு பின்னர் இந்த வரியை முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சில மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து, கடந்த 14 ஆம் தேதி விரிவான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் கூறியது. அதில், 2005 ஆம் ஆண்டு முதல் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரித்தொகையை முன் தேதியிட்டு மாநிலங்கள் வசூல் செய்து கொள்ளலாம். இந்த தொகைக்கு அபராதம் எதுவும் விதிக்க கூடாது. மேலும் இந்த தொகையை ஒரே தொகையாக வசூலிக்காமல் 2026 ஆம் ஆண்டு முதல் 12 தவணைகளாக வசூலித்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பினை அளித்தது.












Click it and Unblock the Notifications