அரையாண்டு லீவு முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு.. திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூரில் தேர்வு ஆரம்பம்
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று ஜனவரி 2ம்தேதி திறக்கப்பட உள்ளன. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை அத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9ம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. எனினும் ஃபெஞ்சல் புயல் காரணமாக தேர்வுகள் தள்ளிப்போயிருந்தன. என்றாலும், தேர்வு விடுமுறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

விடுமுறை: அதாவது 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் புத்தாண்டான ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து பல மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்ற தகவலும் நேற்றைய தினம் திடீரென பரவியது.
திடீர் குழப்பம்: எனவே வியாழன், வெள்ளி என 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தொடர்ந்து வார இறுதியான சனி, ஞாயிறு விடுமுறை வருவதால், திங்கட்கிழமை, அதாவது ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கூறப்பட்டது. எனினும், இதுகுறித்து உறுதியான அறிவிப்பு எதுவும் வராததால், மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு பள்ளிக்கல்வித்துறை சார்பில்,. பள்ளி திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில், விடுமுறை நீட்டிப்பு என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை மறுத்திருந்தது.
விளக்கம்: "தமிழக பள்ளிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (இன்று) திறக்கப்படும். மாணவ-மாணவியர் அனைவரும் நாளை வழக்கம்போல் பள்ளிகளுக்கு வரவேண்டும். சமூக வலைத்தளங்களில் அரையாண்டு விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் வதந்தி ஆகும்" என அறிவித்திருந்தது..
தமிழகத்தில் முன்பு திட்டமிட்டபடி அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2 ந் தேதி திறக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், பைகளை தயார்படுத்தி கொள்ளும்படி அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இன்று திறப்பு: இதையடுத்து, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெஞ்ஜல் புயல் தாக்கத்தால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன... இந்த மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications