அதெப்படி திமிங்கலம்? ஆதித்யா எல்1 சூரியனுக்கு நெருக்கமா போனா உருகிடாதா? விளக்கமளித்த விஞ்ஞானிகள்
சென்னை: ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ள நிலையில், அங்கு சூரியனின் வெப்பத்தை தாங்கி எப்படி இந்த விண்கலம் செயல்பட போகிறது? என்கிற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஆதித்யா எல்1 விண்கலன் ஏவப்படுகிறது. இதில் மொத்தம் 7 கருவிகள் இருக்கின்றன. இந்த விண்கலத்தை விண்வெளிக்கு கொண்டு செல்ல PSLV-C57 பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படுகிறது.

சரி இதெல்லாம் ஓகே, சாதாரண அக்னி நாட்களிலேயே பூமியில் இருக்கும் நம்மால் வெயிலை தாங்க முடிவதில்லை. மாடியில் இருக்கும் வாட்டர் டேங்க் சூடாகி தண்ணீர் ஓவர் ஹீட்டாகிவிடும். இப்படி இருக்கும்போது வருடத்தின் 365 நாட்களும் சூரியனுக்கு நெருக்கமாக இந்த விண்கலம் இருக்கிறது. ஆனால் எப்படி பாதிப்பு இல்லாமல் இது வேலை செய்யும்? உருகிவிடாதா? என்று மாணவர்களும், சாமானிய மக்களும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.
அதாவது பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் சூரியன் இருக்கிறது. ஆனால் நாம் அனுப்பும் விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டு 15 லட்சம் கி.மீ தூரத்திலேயே நின்றுவிடும். அதாவது தற்போது நிலவு இருக்கும் தொலைவை விட 4 மடங்கு தூரத்தில் ஆதித்யாவை நாம் நிலை நிறுத்துகிறோம். அதேபோல சூரியனை பொறுத்த வரையில் இது 1 சதவிகித தூரம்தான். இருப்பினும் சூரியனின் வெப்பம் ஆதித்யா எல்1-ஐ தாக்கும். ஆனாலும் இதை எதிர்கொண்டு ஆய்வு செய்யும் வகையில்தான் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பூமியின் வானிலையை கணிப்பதை போல விண்வெளிக்கும் வானிலை இருக்கிறது. இந்த வானிலையில் ஏற்படும் சில மாற்றங்கள் பூமியை கடுமையாக பாதிக்கலாம். சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள், கதிர்வீச்சுகள், காந்த துகள்கள் ஆகியவை பூமியில் உள்ள மின்னணு பொருட்களை கடுமையாக பாதிக்கும். மட்டுமல்லாது விண்வெளியில் இருக்கும் விண்வெளி ஆய்வு மையத்தையும் இது தாக்கி செயலிழக்க வைத்துவிடும். இந்த நேரத்தில் விண்வெளியில் வீரர்கள் இருந்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
எனவே ஒவ்வொரு விநாடியும் தவறாமல் சூரியனை கண்காணிக்க வேண்டியது அவசியம். இதனை கண்காணிக்க அனுப்பப்படும் விண்கலன்களுக்கு இதுதான் நோக்கம். அதாவது சூரியனின் வெப்பத்தால் இது பழுதடைந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருப்பார்கள். 1,480.7 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலமும் இதே நோக்கத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விண்கலம் டைட்டானியம் எனும் தனிமத்தால் செய்யப்பட்டுள்ளது. விமானங்களும், ராக்கெட்டுகளும் இதை கொண்டுதான் வடிவமைக்கப்படுகின்றன.

இது எடை குறைவாக இருப்பது போல தோன்றும். ஆனால், அதிக வலிமையுடையது, அதிக அளவு வெப்பத்தையும் தாக்குபிடிக்கக்கூடியது. இந்த தனிமம் மிகவும் அரிதானது. உலகில் வெறும் 0.63 சதவிகிதம்தான் இது இருக்கிறது. அதேபோல அலுமினியமும் அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாகும். எனவே இந்த உலோகங்களை கொண்டு விண்கலன்கள் செய்யப்படுகிறது. ஆதித்யா எல்1 விண்கலத்திலும் அதிக அளவு டைட்டானியம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது 1,668 டிகிரி செல்ஸியஸ் அளவு வெப்பத்தை தாங்கும். எனவே ஆதித்யா விண்கலம் உருகுவதற்கு வாய்ப்பு கிடையாது.
மேலும் தங்கமும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஏனெனில் ஒளியை எதிரொலிப்பதன் மூலம் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியும். ஆதித்யாவை விட அமெரிக்கா அனுப்பிய சோலார் பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு நெருக்கமாக 70 லட்சம் கி.மீ தொலைவுக்கு சென்றிருக்கிறது. இதுகூட உருகவில்லை. காரணம் இதில் டங்ஸ்டன் போன்ற உலோகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதுதான் அதிக வெப்பத்தை தாங்கும் மிக முக்கிய உலோகமாகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications