ஜேஎன்யு பேராசிரியர் நிகழ்ச்சியில் பெரிய வன்முறை.. ஏபிவிபியினர் மீது நடவடிக்கை தேவை! எஸ்டிபிஐ கண்டனம்
ஒடிசா உத்கால் பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஒடிசாவின் உத்கால் பல்கலைக்கழகத்தில் ஜேஎன்யு பேராசிரியர் சுரஜித் மசூம்தார் பேசிக் கொண்டிருக்கும் போது ஏபிவிபி அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒடிசாவின் உத்கால் பல்கலைக்கழகத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) பேராசிரியர் சுரஜித் மசூம்தார் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த இளைஞர்கள் சிலர் அவரை பேச விடாமல் தடுத்துள்ளனர்.
மேலும், அங்கிருந்த மாணவர்கள் மீது மட்டுமின்றி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீதும் மோசமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் மிக மோசமான வன்முறை ஏற்பட்டது.

உத்கால் பல்கலைக்கழகம்
இந்திய அரசியலமைப்பு மற்றும் கல்வி குறித்த சிட்டிசன் ஃபோரம் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. ஜேஎன்யுவில் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் துறை பேராசிரியரான மஜூம்தார் உத்கால் பல்கலைக்கழகத்தின் முதுநிலை கவுன்சில் அரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முதலில் அங்கு மேடை ஏறிய இரு இளைஞர்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கருத்தரங்கை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வன்முறை
அப்போது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் திடீரென தங்களைத் தாக்கியதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். அவர்களைத் தடுக்க முயன்றபோது தாக்குதலிலும் ஈடுபடத் தொடங்கியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பிரதிப்தா குமார் நாயக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "என்னையும் எனது நண்பரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துத் தாக்கினார்கள். போலீசார் வந்தே எங்களை மீட்டனர். அவர்கள் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள்" என்றார்.

எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
பல்கலைக்கழகத்தில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒடிசா ஆளும் கட்சியான பிஜேடி மாணவ பிரிவின் மாநில தலைவர் தேவி ரஞ்சன் திரிபாதி வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கால் பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்.12) 'இந்திய அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இடையூறு
ஒடிசா மாநிலத்தில் செயல்படும் சிட்டிசன்ஸ் ஃபோரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதிப்தா ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் டெல்லி மற்றும் தமிழகத்தை சேர்ந்த செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். மாணவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுரஜ்சித் மஜூந்தார், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய சாராம்சங்களை மையப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும் போது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடையூறு செய்துள்ளனர்.

தாக்குதல்
தொடர்ந்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் பிரதிப்தாவை, பேராசிரியர் சுரேந்திர சேனா உள்பட வருகை தந்த தமிழகத்தை சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் வான்முகில் அறக்கட்டளை இயக்குநர் வழக்கறிஞர் பிரிட்டோ மற்றும் திரு. கணேசன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து மாணவர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக வெளியேற்றி நிகழ்ச்சியை சீர்குலைத்துள்ளனர். கருத்தரங்கை சீர்குலைப்பது, அரங்கை சேதப்படுத்துவது மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களை தாக்குவது என்பதை திட்டமிட்டே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் நடவடிக்கை
இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் மதிக்காத, ஏற்றுக்கொள்ளாத, கருத்து ரீதியாக எதனையும் எதிர்கொள்ள துணிவில்லாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் இத்தகைய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. கல்வி வளாகங்களில் இத்தகைய வன்முறை போக்கை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஒடிசா அரசு தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் தாக்கப்பட்ட இந்த விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் ஒடிசா அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications