ஜெய்பீம் விவகாரம்... இயக்குநர் ஞானவேலின் விளக்கத்துடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்க..சீமான்
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஞானவேலின் விளக்கத்துடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஜெய் பீம்' படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சமூகப் பதற்றத்தையும், சச்சரவையும் தணிக்கும்விதமாக சமூகப்பொறுப்புணர்வோடும், மிகுந்த முதிர்ச்சியோடும் அணுகிய இம்முறை வரவேற்கத்தக்கது. ஆகவே, இச்சிக்கலை இத்தோடு கைவிட்டு, இனியும் இப்படத்தின் சிக்கலை ஒட்டுமொத்தச்சமூகத்தின் சிக்கலாக நீடிக்கச்செய்யாது, சமூக அவலங்களுக்காகக் குரலெழுப்பி, மக்களின் துயர்போக்கக் போராடவும், ஆக்கப்பூர்வப்பணிகளில் கவனம் செலுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
முன்னதாக இயக்குநர் ஞானவேல் வெளியிட்ட அறிக்கையில், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என விரும்பினேன். 1990-களில் ராஜாகண்ணு, விர்பலிங்கம் போன்ற பழங்குடிகள் மரணம், சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா போன்ற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்த துயரம் என பல்வேறு அதிகார அத்துமீறல்கள் நடந்தன. இன்றுவரையிலும் அம்மக்களுக்கு சமூக பாதுகாப்பின்மையோடு அது தொடரவே செய்கின்றன.

எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன. நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய வழக்கில், காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால், எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை நம்பிக்கை வெளிச்சம் தருகிற வகையில் படமாக்கினோம். ஜெய்பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் இருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம் ஒரு சமுதாயத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை .1995 காலத்தை பிரதிபலிப்பதுதான் அந்த காலண்டரின் நோக்கம் என விளக்கம் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications