சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழல், அநீதி நிரம்பப்பெற்ற கொடுங்கோல் திமுக ஆட்சி.. 'குண்டாஸ்' சாட்டை துரைமுருகனுக்காக சீறும் சீமான்!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை இழிவாக விமர்சித்து குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனின் ஜாமீனை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பதற்கு தமிழக அரசின் நெருக்கடியே காரணம் என்று அக்கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Seeman Speech | பொரிந்து தள்ளிய சீமான் | Annamalai | Sattai Durai Murugan | *Politics

    இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளருமான ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகன் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 170 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், முந்தைய வழக்கில் பெற்ற அவரது பிணையைத் திரும்பப் பெறச் செய்திருக்கும் திமுக அரசின் போக்கு அதிகாரத்திமிரின் உச்சமாகும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல், அவர் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகளைப் புனைந்து, சிறைப்படுத்தி அடக்குமுறையை ஏவிவிடும் கொடுங்கோல் நடவடிக்கைகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை பாக்ஸ்கான்

    சென்னை பாக்ஸ்கான்

    சென்னையில் அமைந்துள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கோரிப் போராடிய நிலையில், அத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக காணொலி வெளியிட்டதற்காக முறைகேடானப் பிரிவுகளின் கீழ் வழக்குகளைத் தொடுத்து கைது செய்த திமுக அரசு, அவர் பிணையில் வந்துவிடக் கூடாதென எண்ணி, குண்டர் தடுப்புச்சட்டத்தைப் பாய்ச்சி, தனது அரசதிகார வலிமை கொண்டு பழிவாங்கல் போக்கைச் செய்து, சனநாயகத்தைச் சாகடித்திருக்கிறது. மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்களையும், எதிர்க்கருத்து கொண்டவர்களையும் வழக்குகளின் மூலம் சிறைப்படுத்துவதும், அதிகாரத்தைக் கொண்டு அடக்கி அச்சுறுத்துவதுமான திமுக அரசின் செயல்பாடுகள் முழுமையான மக்கள் விரோதமாகும்.

    எச்.ராஜா, சு.சுவாமி

    எச்.ராஜா, சு.சுவாமி

    ஏற்கனவே, பிணைபெற்றிருந்த வழக்கொன்றில், தமிழக அரசு முறையீடு செய்து, அதனைத் திரும்பப் பெறக்கோரி அழுத்தம் கொடுத்ததன் விளைவாக, தம்பி துரைமுருகனின் பிணையை மதுரை உயர்நீதிமன்றக்கிளை ரத்து செய்திருக்கிறது. மதவெறுப்பை விதைத்து சமூக அமைதியைக் குலைக்க முனையும் எச்.ராஜா, சுப்ரமணியசுவாமி போன்றவர்கள் மீது ஒருமுறைகூட பாயாத திமுக அரசின் சட்ட நடவடிக்கைகள் சாட்டை துரைமுருகன் மீது மூர்க்கமாகப் பாய்வதேன்? ‘ஒரு அமைச்சர்கூட சாலையில் நடமாட முடியாது' என ஒட்டுமொத்த அமைச்சரவைக்கே மிரட்டல் விடுத்து, அமைச்சர்களது நடமாடும் உரிமைக்கு எதிராக மன்னார்குடி ஜீயர் இராமானுஜம் பேசியதையும் வெட்கமின்றி கருத்துரிமையென விளித்து, அவரை அனுசரித்து அரவணைக்கும் திமுக அரசுக்கு, தம்பி துரைமுருகன் பாக்ஸ்கான் தொழிலாளர்களின் துயரத்தைப் பேசியது எப்படி சமூக அமைதிக்குக் கேடுவிளைவிப்பதாகத் தெரிகிறது?

    சிதம்பரம் தீட்சிதர்கள்

    சிதம்பரம் தீட்சிதர்கள்

    சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபட வந்த பெண்ணை சாதிவெறியோடு பேசி, அவமதித்து வெளியே துரத்திய தில்லை தீட்சிதர்கள் மீது வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தும், 20 பேரில் ஒருவரைக்கூட கைதுசெய்ய துப்பற்ற திமுக அரசு, ஓராண்டு ஆட்சியில் அடுத்தடுத்து மூன்று முறை தம்பி துரைமுருகனை சிறைப்படுத்தியது எதற்காக? எதன்பொருட்டு? இதுதான் சனநாயகத்தைப் பேணுகிற இலட்சணமா? இதுதான் சமூக நீதி ஆட்சியின் வெளித்தோற்றமா? வெட்கக்கேடு!

    சட்டப் போராட்டம்

    சட்டப் போராட்டம்

    அரசதிகாரத்தின் கொடுங்கரங்களால் குரல்வளை நெரிக்கப்பட்டு சிறையிலுள்ள அன்புத்தம்பி சாட்டை துரைமுருகனை நேரில் சந்தித்துப் பேசினேன். தன் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடைத்து, விரைவில் சிறைமீண்டு வருவார் தம்பி துரைமுருகன். அதற்கான சட்டப்போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முனைப்போடு செய்து வருகிறது. அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தம்பி துரைமுருகனுக்கு உற்றதுணையாகவும், உளவியல் பலமாகவும் நானும், நாம் தமிழர் கட்சியின் உறவுகளும் இறுதிவரை நிற்போமென உறுதிகூறுகிறேன்.

    அரசியல் சாசனம் மீதான தாக்குதல்

    அரசியல் சாசனம் மீதான தாக்குதல்

    முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றுக்கருத்து கொண்டோர், விமர்சிப்பவர்கள் மீது ஆளும் அரசு கொடும் வழக்குகள் தாக்கல் செய்து, சிறைப்படுத்தி வருவதென்பது கருத்துரிமைக்கெதிரான போர் மட்டுமல்ல; அக்கருத்துரிமையை நமக்கு வழங்கி வருகிற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதே நடத்தப்படுகிற கோரத்தாக்குதலுமாகும். இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியதும், துணிந்துப் போராட வேண்டியதும் சனநாயகப்பற்றாளர்களின் தார்மீகக்கடமையாகும். ஆகவே, ஊழலும், அநீதிகளும் நிரம்பப்பெற்ற கொடுங்கோல் திமுக ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்கும், எத்தனை அடக்குமுறை வந்தாலும் அதனைத் துணிந்து எதிர்கொள்வதற்கும் இலட்சக்கணக்கான தமிழின இளம் தலைமுறையினர் தயாராகி வருகிறார்கள் எனப் பேரறிவிப்பு செய்து, அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களை கொடும் வழக்குகளிலிருந்து விடுவித்து, வெகுவிரைவில் சிறைமீட்போமென உறுதியளிக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    English summary
    Naam Tamilar Chief Seeman has condemned that the Tamilnadu Govt for Sattai Duraimurugan's bail cancel by Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X