சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'அண்ணன்' வைகோவுக்கு தண்டனை- திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை- சீமான் கொந்தளிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சாந்தி, வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ10,000 அபராதம் விதித்தார். மேலும் வைகோவுக்கான தண்டனையை 1 மாதம் நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் வைகோவுக்கு எதிரான தீர்ப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

கருத்துரிமை மீதான தாக்குதல்

கருத்துரிமை மீதான தாக்குதல்

இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் சேர்ந்து ஈழ மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையைக் கண்டித்து, கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரசு அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்றுகுவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதையத் திமுக அரசு, அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகச் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் தற்போது அண்ணன் வைகோ குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன்.

ராஜபக்சேக்கள் ஒப்புதல்

ராஜபக்சேக்கள் ஒப்புதல்

இலங்கை அரசுக்குப் பணமும், ஆயுதமும் கொடுத்து ஈழப்போரைப் பின்நின்று நடத்தி திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்த முழுக்க முழுக்கத் துணைநின்றது அன்றைய காங்கிரசு - திமுக கூட்டணி அரசு என்பதை உலகறியும். ‘இந்தியா விரும்பியே போரை நடத்தினோம்' என இனப்படுகொலையாளன் ராஜபக்சேவும், அவனது சகோதரர்களும் இன்றைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

வைகோவுக்கு தண்டனை- ஏற்க முடியாது

வைகோவுக்கு தண்டனை- ஏற்க முடியாது

இந்த மகத்தான உண்மையைத்தான், அன்றைக்கு உலகுக்கு உரத்துக் கூறியிருக்கிறார் வைகோ. அதற்காகத் தற்போது அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அளித்திருப்பதை சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவராலும் ஏற்க முடியாது. ‘தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது ஒருபோதும் குற்றமாகாது' என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் தெளிவுப்படுத்தியிருக்கிற சூழலில், தற்போது விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அண்ணன் வைகோவிற்கு தண்டனை வழங்கியிருப்பது ஏற்கனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கின்ற செயல்.

எப்படி தேசத்துரோகமாகும்?

எப்படி தேசத்துரோகமாகும்?

தங்கள் மீது இனப்படுகொலையின் குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது,அது வரலாற்றின் ஏடுகளில் இருந்து மறைக்கப்பட வேண்டும் என்ற காரணங்களுக்காக அன்றைய காங்கிரஸ் ஆதரவு திமுக அரசு அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கினை பதிவு செய்தது.தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிக்கு எதிராக, லட்சக்கணக்கான தமிழர்கள்கொன்று குவிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக, குரல்கொடுக்க, உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டப் பேசுவது எப்படி இந்த நாட்டிற்கு எதிரான தேசத்துரோக குற்றமாகும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

அந்நிய நாட்டுக்கு துரத்துதல்

நாட்டு மக்களை மதத்தின் பெயரால் துண்டாடி சொந்த நாட்டு மக்களையே அடித்துஉதைத்து அந்நிய நாட்டிற்குப் போகச் சொல்வதும், மதத்தை காரணம் காட்டி சொந்த நாட்டின் பெண்களையே பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லுவதும், பச்சிளம் பிள்ளைகளை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதும், விரும்பியக் கல்வியைக் கற்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டு நீட் தேர்வினால் பச்சிளம் பிள்ளைகளின் கனவைக் கருக்கி உயிரைக்குடிப்பதும், தங்களது நெடுநாள் உழைப்பினால் விளைந்தப் பணத்தை எடுத்துப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பணமதிப்பிழப்பு எனும் பொருளாதாரப் படையெடுப்பைச் சொந்த நாட்டின் குடிமக்கள் தொடுத்து நூறு கோடி மக்களையும் வீதியில் நிற்கச் செய்ததும் விரும்பிய மார்க்கத்தையும், விரும்பிய உணவையும்கூட தேர்ந்தெடுக்காத முடியாத அளவுக்குச் சகிப்புத்தன்மையைக் குலைத்து அச்சுறுத்தலை நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி அவர்களைப் பீதியடையச் செய்வதும் தான் உண்மையான தேசத்துரோக செயல்பாடுகள்.

திடீர் தீர்ப்பால் சந்தேகம்

திடீர் தீர்ப்பால் சந்தேகம்

ஆனால் இவையாவும் தேசத்துரோகக் குற்றமாகத் தெரியாத இந்நாட்டின் நீதித்துறைக்கு, விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவதும், அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைத் தாங்கி நீதிகேட்பதும்தான் தேசத்துரோகக் குற்றமாகத் தெரிவது நம் நாட்டின் நீதி பரிபாலன முறைகளில் பாரபட்ச தன்மை இருப்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இன்னும் சில நாட்களில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க இருக்கிற நிலையில் பல நாட்கள் நிலுவையில் இருந்த இவ்வழக்கில் திடீரென அண்ணன் வைகோவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது என்பது நீதித்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்களையும் வினாக்களையும் எழுப்புகிறது. ஈழத் தாயகத்தின் விடுதலைக்காக இறுதிவரை களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக தேசத்துரோகி எனப்பழி சுமத்தப்பட்டுத் தண்டனைப் பெற்றுள்ள அண்ணன் வைகோ அவர்களுக்கு மேல்முறையீட்டில் நீதி கிடைக்க அவரது கருத்துரிமை சார்ந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி உடனிருக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Thamizhar Party Chief Coordinator Seeman has condemned that the verdict against MDMK General Secretary Vaiko in Sedition Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X