சண்டைதான்.. சண்டையே வந்தாலும் சீமானுக்கு எதிரான விஜயலட்சுமிக்கு ஆதரவுதான்.. வீரலட்சுமி திட்டவட்டம்
சென்னை: தமக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் என்னதான் சண்டை வந்தாலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகார் விவகாரத்தில் விஜயலட்சுமியை தொடர்ந்து ஆதரிப்பேன் என தமிழ்நாடு முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி வீடியோ மூலம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு சீமான் தம்மை மதுரையில் திருமணம் செய்தார். அதன் பின்னர் தம்மிடம் இருந்த பணம், நகைகளை பறித்துக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்துவிட்டார் என 2011-ல் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அப்புகாருக்குப் பின்னர் விஜயலட்சுமி சற்று அமைதி காத்தார். ஆனால் தமிழ்நாட்டை விட்டு பெங்களூரு சென்ற பின்னர் தொடர்ந்து சீமானுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி முன்வைத்தார். அவருக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆதரவாக இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சென்னைக்கு வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது புகார் கொடுத்தார். இப்புகார் மீது விஜயலட்சுமியிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 8 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது. இதன்பின்னர் விஜயலட்சுமியின் வாக்குமூலத்தை திருவள்ளூர் மாஜிஸ்திரேட் பதிவு செய்தார்.
இதனடிப்படையில் சீமானை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக உதகைக்கு தனிப்படை போலீசார் சென்றதாகவும் தகவல் பரவியது. ஆனால் தம்மை போலீசார் கைது செய்யவும் இல்லை; சம்மன் கொடுக்கவும் வரவில்லை என கோவையில் சீமான் பேட்டியளித்தார்.
இதனிடையே நடிகை விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமியும் ஒரு வீடியோ வெளியிட்டார். இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்த வீரலட்சுமி, சீமான் மீதான புகார்கள் அனைத்துக்கும் 100% முகாந்திரம் உள்ளது. விஜயலட்சுமியின் சீமான் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனக்கும் விஜயலட்சுமிக்கும் சண்டை என செய்தி பரவுகிறது. எனக்கும் விஜயலட்சுமிக்கும் சண்டையே இருந்தாலும் சீமானுக்கு எதிரான புகார்கள் விவகாரத்தில் விஜயலட்சுமியை முழுமையாக நான் ஆதரிக்கிறேன். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications