சீமான் மீதான புகார்.. 6 மணி நேர விசாரணையில் விஜயலட்சுமி கூறியது என்ன? பரபர தகவல்
சென்னை: சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் 6 மணிநேரமாக பரபரப்பான விசாரணை நடத்தப்பட்டது. சீமான் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்வதாக விஜயலட்சுமி கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில் இரவு 11 மணிக்கு பிறகு அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தவர் சீமான். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது திருமண மோசடி புகாரை கூறி பரபரப்பை கிளப்பினார். இதற்கு முன்பும் அவர் இந்த புகாரை கூறியிருந்தாலும் கூட சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்தார்.
அந்த புகாரில் சீமான் திருமண மோசடி செய்ததாக கூறியிருந்தார். அதாவது கடந்த 2008ம் ஆண்டு சீமான் அவரை மதுரையில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், அதன்பிறகு ஏமாற்றிவிட்டதாகவும் கூறியிருந்தார். அதோடு சீமான் எப்படி தன்னை ஏமாற்றி இருந்தார் என்பது பற்றி புகாரில் விளக்கி இருந்தார். அதோடு மட்டுமின்றி பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சீமானிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ‛‛இவ்வளவு நேரம் கேள்விகளை கேட்ட நீங்கள், இப்போது ஏன் கேவலத்தை கேட்கிறீர்கள். விஜயலட்சுமி உண்மையாக புகாரளித்தால் போலீசார் கைது செய்வார்கள். ஆனால் இது போலி புகார். இதன் பின்னணியில் அரசியல் இருக்கலாம்'' என தெரிவித்தார்.
இந்நிலையில் தான் இன்று நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மீதான புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு விஜயலட்சுமியை போலீசார் வரவழைத்தனர். இதையடுத்து இன்று மாலையில் இருந்து 6 மணிநேரமாக விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். தனியறையில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின்போது சீமான் மீது நடவடிக்கை தேவை என விஜயலட்சுமி கூறியுள்ளார். அதோடு அவர் தரப்பில் புகாரில் கூறப்பட்டு இருந்த குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இதற்கிடையே தான் இந்த விசாரணை 6 மணிநேரம் கடந்தும் தொடர்ந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே செல்வேன் என நடிகை விஜயலட்சுமி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து இரவு 11.30 மணியளவில் நடிகை விஜயலட்சுமி ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து போலீஸ் காரில் வீடு திரும்பினார்.
இது ஒருபுறம் இருக்க சீமான் உடல்நலக்குறைவு காரணமாக பல்லடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications