விஜய் படத்துக்கு கன்னடத்தில் தடையா? சீமான் பரபர-கேஜிஎப்ஐ தடுக்க முடியும்! சித்தார்த்துக்கு சப்போர்ட்
சென்னை: விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் நடித்த படத்தை கர்நாடகாவில் திரையிடவிடாதபோது நான், கேஜிஎப் படத்தை தடுத்தால் அவர்களால் திரையிட முடியுமா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகாவில் சித்தா பட புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த்தை கன்னட ரக்ஷா வேதிகா என்ற அமைப்பினர் உள்ளே புகுந்து விரட்டிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது குறித்து செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் சுதீப் நடித்துள்ளார். தம்பி யாஷ் நடித்து கேஜிஎப் 2 பகுதியும் வந்தது. நாம் எந்த இடையூறுமே செய்வது இல்லை. ஆனால், அவர்கள் விஜய் படத்தையோ மற்ற நமது நடிகர்கள் படத்தையோ திரையிட விடுவது இல்லை. சித்தார்த் ஒரு கலைஞன். அவருக்கும் தண்ணீர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை. அவர் காவிரியில் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கவும் இல்லை. அது அரசியல். தலைவர்கள் பேசி தீர்வு காண வேண்டும்.
ஒரு நடிகரை நீங்கள் சுற்றி நின்று கலாட்டா செய்வது எப்படி? நான் என்ன கேட்கிறேன், அந்த அரங்கத்திற்குள் காவலர்கள் பாதுகாப்புக்கு நின்றார்களா இல்லையா? ஏன் அப்படி சத்தம் போட்டவர்களை அப்புறப்படுத்தவில்லை? இந்த மாநிலத்தில் நாங்கள் அப்படி செய்தால் எங்கள் காவலர்கள் கைது செய்து ஒரு இடத்துக்கு அழைத்து சென்றுவிடுவார்களா இல்லையா? அந்த இடத்தில் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வார்கள். ஏன் அந்த அடிப்படை பண்பு, மாண்புகூட அந்த மாநிலத்துக்கு இல்லை?

எங்களை இனவெறியன் என்கிறீர்கள். அவர்கள் செய்வதற்கு பெயர் என்ன என்று சொல்வீர்கள்? ஒவ்வொரு முறையும் எங்களை அடிக்கிறார்கள். தண்ணீர் தானே கேட்டோம். அடியா கேட்டோம். சித்தார்த்துக்கும் காவிரி நதிநீர் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம். அவர் நடித்தார். படத்தை பற்றி பேசுகிறார். போகிறார்.
சீன நடிகர் வந்தால் அனுமதிப்பீர்கள். ஒரு இங்கிலாந்து நடிகர் வந்தால் அனுமதிப்பீர்கள். அமெரிக்க நடிகர் வந்தால் அனுமதிப்பீர்கள். உலக சந்தையாக இருக்கிறது இந்தியா. உள்ளூரில் நாங்கள் தயாரிப்பதை பக்கத்துக்கு மாநிலத்தில் விற்க முடியவில்லையே. அப்படியென்றால் இது என்ன இந்தியா?

அமெரிக்க படம் ஓடுகிறதா இல்லையா? சீனா படம் ஓடுகிறதா இல்லையா? வேறு நாட்டு படம் கொரியன் படம் ஓடுகிறதா இல்லையா? பக்கத்து மாநிலத்துக்காரன் நான் தயாரித்தை அங்கு வெளியிட முடியாது என்றால் உலக சந்தையாக இருக்கும் என் நாட்டில் உள்ளூர் சந்தை எடுபடாது. அப்ப எப்படி?
இதுவே கேஜிஎப் வரும்போது நான் தடுக்க எவ்வளவு நேரம் ஆகும் சொல்லுங்க? திரையரங்கத்தை முற்றுகையிடுவேன்.. அந்த படத்தை திரையிடக் கூடாது என்று ஒரு அறிக்கை வெளியிட்டால் உன்னால் அந்த படத்தை வெளியிட முடியுமா? அப்படி என்றால் நான் எவ்வளவு மாண்பாக நடந்துகொள்கிறேன்.
அதெல்லாம் ரொம்ப தப்பு. அந்த நாட்டில் உள்ள இந்திய ஒருமைபாடு, தேச ஒற்றுமை பேசும் கட்சிகள், முற்போக்கு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மானுட பற்றாளர்கள் யாருமே வாய் திறக்கவில்லை என்பது ரொம்ப கொடுமை. இங்கு இருக்கும் கட்சிகளும் அதை கண்டிக்கவில்லை என்பது பெரிய அவமானம்." என்றார்.












Click it and Unblock the Notifications