Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் என்னாச்சு? கைவிரித்த திமுக..கண்ணீர் விடும் அரசு ஊழியர்கள்! ஜாக்டோ ஜியோவுடன் கைகோர்த்த சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் எனவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

Seeman Old Pension Scheme JACTTO GEO

கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நிறைவேற்ற மறுத்து அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.

அது தவிர, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், அரசுப் பணியாளா்களின் பணிக் காலத்தைப் பணியில் சோ்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாதப் பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30% க்கும் மேலாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட அரசு ஊழியா்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற மறுத்து ஏமாற்றி வருகிறது.

கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரலில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்' எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்துவந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் தொடக்கம் முதலே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர். அரசு ஊழியர்களின் 13 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016 ஆண்டு அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். அக்குழு அமைக்கப்பட்ட 4 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு வல்லுநர் குழு தனது ஆய்வு அறிக்கையை 2018-ம் ஆண்டுதான் தமிழ்நாடு அரசிடம் அளித்தது.

ஆனால், ஐயா எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அன்றைய அதிமுக அரசு, வல்லுநர் குழு அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டது. அதன்பின், சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வல்லுநர் குழு அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டதையடுத்து வேறு வழியின்றி, 2019 சனவரி மாதம் அறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது. இதனால் அரசு ஊழியர்களின் கண்ணீர்ப் போராட்டம் மீண்டும் தொடர்கதையானது.

இதற்கிடையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியமே இல்லை என்று கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவையிலேயே அறிவித்து, நம்பியிருந்த அரசு ஊழியர்களை ஏமாற்றியது 'திராவிட மாடல்' திமுக அரசு. எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றுகூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

இந்தியாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் மேற்கு வங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து இராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்டன. ஆனால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தக்கோரிப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளும் ஆட்சி, அதிகாரப் பலம் கொண்டு அவர்களை அடக்கி ஒடுக்கியும், பணியிடை நீக்கம் என அச்சுறுத்தியும் அவர்களது போராட்டத்தை, நீர்த்துப்போகச் செய்துவருவது கொடுங்கோன்மையாகும்.

இருப்பினும், தங்களின் நியாயமான கோரிக்கை என்றேனும் ஒருநாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் அரசு ஊழியர்கள் இருந்து வந்தனர். ஆனால், அதனையும் கெடுக்கும் வகையில் திமுக அரசு ஓய்வூதிய இயக்குநரகத்தை கலைத்து, அதனை கருவூலங்கள் கணக்குத்துறையுடன் இணைத்ததன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர முடியாத கொடுஞ்சூழலை திமுக அரசு உருவாக்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு இழைத்துள்ள இம்மாபெரும் அநீதி, எக்காலத்திலும் மன்னிக்க முடியாத பச்சைத் துரோகமாகும்.

எதிர்க்கட்சியாக இருந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவோம், ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கும், மண்ணிற்கும் பெருந்துரோகத்தை மட்டும் தான் செய்வோமென்றால் திமுகவை நிரந்தரமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கவும் அரசு ஊழியர்களும், ஆசிரியர் பெருமக்களும் ஆயத்தமாகிவிட்டனர்.

ஆகவே, திமுக அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக் காலமாகப் போராடிவரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) முன்னெடுக்கும் எத்தகைய அறப்போராட்டத்திற்கும் தோள்கொடுத்து, கோரிக்கை வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி உறுதியாகத் துணை நிற்கும் என்பதையும் இவ்வறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+