விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங்கை கைது செய்யனும்- சீமான்
சென்னை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூரமாக சித்ரவதை செய்தார் ஏஎஸ்பி பல்வீர்சிங் என புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக இன்று தமிழ்நாடு சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. விவகாரத்தைப் பொறுத்தமட்டில், குற்றச் செயலில் ஈடுபட்டு, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன், சேரன்மாதேவி சார்-ஆட்சியர் / உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டார். காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன் என்பதையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கைதுசெய்யப்படுவர்களது பற்களைப் பிடுங்கியும், பிறப்புறுப்புப்பகுதியில் கொடூரமாகத் தாக்கியுமென காவல் உதவிக்கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கொடுஞ்சித்திரவதையில் ஈடுபடும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விசாரணை எனும் பெயரில் வரம்பு மீறி, கொடூரமான மனிதவதையை அரங்கேற்றியுள்ள பல்வீர் சிங்கின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
மனிதநேயம் துளியுமில்லாத பல்வீர் சிங் போன்றவர்கள் மக்கள் சேவைப்பணிகளில் இருக்கவே தகுதியற்றவர்கள். ஏற்கனவே, காவல்துறைக்கும், பொது மக்களுக்குமிடையே பிணைப்பில்லாத தற்காலச்சூழலில், இதுபோன்ற கொடும் நிகழ்வுகள் காவல்துறை மீது மக்களுக்கு பெரும் வெறுப்பை உருவாக்கிவிடும். பல்வீர் சிங்கை காத்திருப்புப்பட்டியலுக்கு மாற்றியிருப்பது போதுமான நடவடிக்கை இல்லை. எளிய மக்களிடம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடும் காவலர்களை சடங்குக்கு ஏதாவது ஒரு துறைசார்ந்த நடவடிக்கைக்கு மட்டும் உட்படுத்திவிட்டு, அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை அளிக்காது சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களைத் தப்பவிடும் அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது. ஆகவே, காவல் உதவிக்கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை உடனடியாக நிரந்தரப் பணிநீக்கத்திற்கு உட்படுத்த வேண்டுமெனவும், அவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இத்தோடு, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அவர்களுக்கு தகுந்த மருத்துவச்சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications