என்னையும் விஜய்யையும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த போது.. பிரசவம் பார்த்தது திருமாவளவன்.. சீமான் பதிலடி!
சென்னை: சீமான் மற்றும் விஜய் ஆகிய இருவரும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்ற திருமாவளவனின் விமர்சனத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக எங்களை பெற்றெடுத்த போது, பிரசவம் பார்த்ததே திருமாவளவன் தான் என்று கூறியுள்ளார்.
அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், திமுக ஒரு தீய சக்தி என்பது விஜய்யின் ஒரே நோக்கம். திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக தான் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். விஜய்யும் சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது என்று கடுமையாக விமர்சித்தார்.

திருமாவளவனின் விமர்சனம் சீமான் மற்றும் தவெகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதி காத்ததும், வட மாநிலங்களில் நிகழ்ந்த கிறிஸ்துமஸ் விழாவில் வலதுசாரி அமைப்புகள் தாக்குதல் நடத்தியதற்கும் தவெக கண்டனத்தை பதிவு செய்யவில்லை. அப்படியே கண்டனம் பதிவு செய்தாலும், பாஜக அல்லது சங்பரிவார் என்ற வார்த்தையே இல்லாமல் இருந்தது.
மறுபக்கம் சீமான் ஆர்எஸ்எஸ் மேடையில் பிராமணர் கடப்பாரையை கொண்டு பெரியார் இருப்பை தகர்ப்பேன் என்று பேசி இருந்தார். இதன் காரணமாகவே திருமாவளவனின் விமர்சனம் அமைந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருமாவளவனின் விமர்சனத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நாதக பொதுக்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், என்னையையும் தம்பி விஜய்யையும் பாஜக பெற்றெடுத்த போது, திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் என்று கூறி நக்கலாக சிரித்தார். தொடர்ந்து, நான் யார் என்பதை என்னிடம் தான் கேட்க வேண்டும்.. தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருந்தார் என்று நினைத்தேன் என்கிறார்.
ஆனால் இத்தனை காலமாக போலி தமிழ்த் தேசியவாதி என்றுதான் என்னை பேசினார்கள். நான் கூட போலி தமிழ்த் தேசியவாதிகள் என்று கூலி திராவிடர்கள் கூவித் திரிகிறார்கள் என்றேன். அவர் ஆர்எஸ்எஸ், பாஜக என்றால், நான் அப்படியா.. அவர்கள் என்னை கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய கைக்கூலி என்றார்கள்.. இவர்கள் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்கிறார்கள்..
ஆனால் பொதுக்குழு நடத்தவே நாங்கள் திரள்நிதி பெற்று நடத்தி வருகிறோம். யாராவது கூலி கொடுத்துவிட்டு பேசுங்கள்.. விடுங்கள்.. அண்ணன் தானே பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார். சீமானின் இந்த பதில் நாதகவினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசியலில் புதிய விவாதம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications