பலமான 50 தொகுதிகள்.. கணக்கு போட்டு களமிறங்கும் சீமான்.. விஜய்க்கு எதிராக தயாராகும் நாதக!
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தங்களுக்கு சாதகமான 50 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும், ஒவ்வொரு தொகுதிகளிலும் அதிக வாக்குகளை பெற வேண்டும் என்பதிலும் சீமான் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆனால் இந்த இரு கட்சிகளுக்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் பட்டியலையே தயாராக வைத்துள்ளார்.

அந்த வகையில் வேதாரண்யம் தொகுதியின் வேட்பாளராக இடும்பாவனம் கார்த்தியை சீமான் சில மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்துவிட்டார். இதன்பின் மாவட்ட வாரியாக சீமான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பிப்ரவரியில் நடக்கவுள்ள திருச்சி மாநாட்டின் பணிகளையும் சீமான் கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில் சீமான் தனது 59வது பிறந்தநாளினையொட்டி சுமார் 3 ஆயிரம் பேருக்கு கமகம அசைவ விருந்தை நேற்று போட்டுள்ளார். இதனால் நாதக நிர்வாகிகள் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேபோல் சில நாட்களுக்கு முன்பாக நாதக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த ஆலோசனையின் போது நாதகவினர் பல்வேறு ஆலோசனைகளை கொடுத்துள்ளனர்.
குறிப்பாக நாதகவுக்கு சாதகமான 50 தொகுதிகள் கொண்ட பட்டியலை சீமானின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். இதனை சீமான் தரப்பில் இந்த 50 தொகுதிகளில் கூடுதலாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இளைஞர்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதிலும் சீமான் குறியாக இருப்பதாக தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாதகவுக்கு 8 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. அதுமட்டுமல்லாமல் நாதகவுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவும் உருமாறியது. இதனால் வரும் தேர்தலில் வாக்கு சதவிகிதத்தை இரட்டை இலக்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், சில தொகுதிகளிலாவது நாதக வேட்பாளர்கள் வெல்ல வேண்டும் என்று சீமான் கணக்கு போட்டுள்ளார்.
அதற்கான ஆரம்பப் புள்ளியாக நாதக மாநாடு அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் நாதகவுக்கு போட்டியாக தவெக வந்துவிடக் கூடாது என்பதிலும் சீமான் கவனமாக இருக்கிறார். இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களாக சீமான் கிராமங்களை நோக்கி பயணிக்க தொடங்கி இருப்பதாக நாதகவினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications