கொத்து கொத்தாக கோபியில் 40 பேரை அள்ளிய எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையனின் கோட்டையில் பெரிய ஓட்டை?
சென்னை: அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் பல்வேறு நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார்.. இதற்கு பிறகுதான், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் விடுத்தார்.. இந்த கோரிக்கைக்கு பிறகு, செங்கோட்டையனுக்கு ஷாக் மேல் ஷாக் தந்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. இப்போதுகூட செங்கோட்டையனின் 40 ஆதரவாளர்களின் பொறுப்புகளை பறித்துள்ளார்.
அதிமுக, பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மறுபடியும் சேர்க்க வேண்டும் என்று பாஜக மேலிடம் வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.. எனினும் இதற்கு வழக்கம்போல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மறுப்பு கூறி வருகிறார்.

எனினும், பாஜக மேலிடம், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை கூட்டணிக்குள் மீண்டும் இணைக்க முயற்சித்து வருகிறது. இதே ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் போர்க்கொடி உயர்த்தினார்..
செங்கோட்டையன் கோட்டை
ஆனால், மறுநாளே செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கட்சி பதவிகளையும், அவரது ஆதரவாளர்களான மாஜி எம்பி சத்திய பாமா உள்ளிட்ட 13 பேரை கட்சி பதவிகளையும் பறித்து 2 பேரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
இதை சிறிதும் எதிர்பார்க்க செங்கோட்டையன், உடனடியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி, எடப்பாடி மீதான புகார்களை செங்கோட்டையன் அடுக்கினார்..
தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து, தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரின் வாக்கு சதவீதத்தை கருத்தில்கொண்டு அவர்களை மறுபடியும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம்?
எனவே, பிரிந்தவர்களை கட்சிக்குள் சேர்த்து கொள்ளும்படி, எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தங்களை மேலிடம் தரக்கூடும் என்று கணிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவிகளையும் பறித்து தற்போது மீண்டும் அதிரடி காட்டியுள்ளார்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோபி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் தலைமையில் கோபியில் நடைபெற்றது..
எடப்பாடிக்கு போன லிஸ்ட்
அப்போது செல்வராஜ் பேசும்போது, இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் யார்? என்பது குறித்து லிஸ்ட் எடுக்கப்பட்டு, கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.. அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியிருந்தார்,.
அதன்படியே, அந்தியூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள் யார் யார்? என்று லிஸ்ட் எடுக்கப்பட்டு, கட்சி தலைமைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
40 பேர் பொறுப்பு பறிப்பு
இந்நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் கட்சி பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்...
மேலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கே.கே. கந்தவேல்முருகன், இணைச்செயலாளர் அனுராதா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.ஆர். செல்வம், இணைச்செயலாளர் கே.பி. சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 40 பேர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
கோபியில் சலசலப்பு
கடந்த வாரம் நீலகிரிக்கு பிரச்சாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றபோது, கோபி வழியாகத்தான் சென்றார்.. அப்போது கோபியில் உற்சாக வரவேற்பு எடப்பாடிக்கு தரப்பட்டது..
அதாவது, கோபியிலும் தன்னுடைய செல்வாக்கு உள்ளது என்பதை செங்கோட்டையன் தரப்புக்கு நிரூபிக்கவே, இப்படியான வரவேற்பை எடப்பாடி அன்று நடத்தியதாக சலசலக்கப்பட்டது. இப்போது மீண்டும் செங்கோட்டையனை சீண்டும்விதமாக, அவரது ஆதரவாளர்களின் பொறுப்புகளை பறித்துள்ளது ஈரோடு அதிமுகவில் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications