செம்ம ட்விஸ்ட்.. நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய முன்னோட்டம் பார்க்கிறாரா நடிகர் பார்த்திபன்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை தாம் சந்தித்து வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் குறித்து விவாதிப்பது போல கனவு கண்டதாக திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் கட்சியில் இணைவதற்கான முன்னோட்டமாகவே இப்படி ஒரு கனவு கண்டதாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நடிகர் பார்த்திபன். புதுச்சேரியில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன்,
ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கு வரலாம்; யாரும் கட்சி தொடங்கலாம். முதல்வர் பதவிக்கு யாரும் ஆசைப்படலாம்; இதில் எந்த தவறுமே இல்லை. ஒருவர் அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தும்போது பல்வேறு தடைகள் இருக்கும். ஜல்லிக்கட்டில் பல தடைகளை தாண்டிதான் மாடு பிடிக்க வேண்டும்; அதேபோல அரசியலிலும் ஆட்சியை பிடிப்பது என்பது பெரிய விஷயம். நடிகர் விஜய் அவருக்கு ஏற்படுகிற தடைகளை தாண்டினால்தான் உண்மையான தலைவருக்கான அழகு வெளிப்படும் என கூறியிருந்தார்.

விஜய் பாதை சரியானதே
மேலும் எப்போதும் ஆளும் கட்சியை விமர்சித்தால்தான் அடுத்த இடத்துக்கு வர முடியும்; எம்ஜிஆர், கருணாநிதி அதையே செய்தனர். ஆளும் கட்சியை எதிர்த்துதான் வர வேண்டும்; நடுநிலையோடு செயல்பட முடியாது; நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. விஜய் அழைத்தாலும் அவரது கட்சியில் சேரமாட்டேன். என்னுடைய அரசியல் பார்வை என்பது வேறொரு மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் அரசியலின் நல்ல விஷயம் எனவும் கூறியிருந்தார்.
விஜய் சந்திப்பு குறித்த பார்த்திபனின் கனவு
இந்த பின்னணியில் தமது எக்ஸ் பக்கத்தில் நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளதாவது: நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் ..... அது கனவு! ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் ...இப்படி சில பல! காரணமாக இருக்கலாம். இவ்வாறு நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
தவெகவில் சேரும் ஆசை இருக்கிறதா?
இந்த பதிவு தொடர்பான பின்னூட்டங்களுக்கு நடிகர் பார்த்திபன் அளித்த பதில் ஒன்றில், தவெகவில் சேரும் ஆசை இல்லை என்பதால் இதை இடுகிறேன் நண்பா! இருந்தால் கமுக்கமாக இணைந்திருப்பேனே! எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய நண்பர் இன்றைய தலைவர் விஜய்?
மேலும் "நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான" என பதிவிட்டுள்ள போதே தெரிகிறது.. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விஜய்யை தலைவராக ஏற்கப் போகிறீர்கள் எனவும் சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். நடிகர் பார்த்திபனின் இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் பெரும் விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications