டிமிக்கி கொடுத்த எச்.ராஜா கைது.. "நாய் வண்டியில் ஏறமாட்டேன்".. போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து வாதம்!
சென்னை: "நாய் வண்டியில் ஏற மாட்டேன்" எனக் கூறி போலீசார் வாகனத்தில் ஏற மறுத்து இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. பின்னர் மாநகர பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு அது தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது அமலாக்கத்துறை. அதில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி இன்று போராட்டத்துக்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த காரை போலீசார் சூழ்ந்திருந்தனர்.
போலீசார் தன்னை கைது செய்ய திட்டமிட்டதை அறிந்த எச்.ராஜா, வேறு ஒரு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து போலீசார் சென்னையில் உள்ள எச்.ராஜா வீட்டிற்கு சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை. ஒய்தையடுத்து, எழும்பூருக்கு வந்த அவரை கைது செய்ய முயன்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த வந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் என்ன குற்றவாளியா? குற்றவாளி ஏறும் வண்டியில் நான் ஏறமாட்டேன். செந்தில் பாலாஜி என்ற குற்றவாளியை சிறையில் வைத்து, அவர் மீண்டும் இன்று வந்து குற்றம் செய்கிறார். செந்தில் பாலாஜியை கைது செய்ய உங்களுக்கு முதுகெலும்பு உண்டா?
காவல்துறை குற்றவாளிகளுக்கு சல்யூட் அடிக்கிறது. நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்து வந்தீர்கள்? எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள்? செந்தில் பாலாஜியை உங்களுக்கு கைது செய்ய முடியுமா? காவல்துறை வாகனத்தில் நான் ஏறமாட்டேன். எங்களை நீங்கள் இங்கு கைது செய்யலாம். நாங்கள் வீடு வீடாக செல்வதை யாராலும் தடுக்க முடியாது" என ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து, அங்கு மாநகர பேருந்து கொண்டு வரப்பட்டு, அதில் எச்.ராஜா கைது செய்யப்பட்டு ஏற்றிச் செல்லப்பட்டார். அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் எச். ராஜா மற்றும் பாஜக நிர்வாகிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications