விஜய்யை பார்த்து சீமானுக்கு பயம்.. ஓட்டு வங்கியே மொத்தமா காலியாக போகுதா? அலசும் சீனியர்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாட்டுக்குப் பிறகு, அரசியல் களத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். அதன் பின்னணி என்ன? விஜய்யால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பா? என்பது குறித்தெல்லாம் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் அலசுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் கண்டுள்ள நிலையில், அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், திமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். மாநாட்டுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக தாக்கி வருகிறார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள விவாதங்கள் குறித்து நமது ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். இனி அதனைப் பார்க்கலாம்.

கேள்வி: தமிழக வெற்றிக் கழக மாநாடு அதைத்தொடர்ந்து செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பெரியளவில் பேசுபொருளாகி இருக்கிறது. விஜய் உண்மையில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துவார்?
ப்ரியன்: அது விஜய் எடுக்கப்போகும் நிலைப்பாட்டைப் பொறுத்து இருக்கிறது. விஜய் மாநாட்டில் பேசியதைப் பார்க்கும்போது விஜய் ஒரு தீவிர திமுக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. பாஜக எதிர்ப்பு அரசியலையும் பேசுகிறார். இதை தொடர்ந்து செய்யும்போது அதிமுக ஓட்டுகளும், சீமான் ஓட்டுகளும் விஜய் பக்கம் வரும். பாஜக எதிர்ப்பை தீவிரமாகப் பேசும்போது, திமுகவுக்கு செல்லக்கூடிய ஓட்டுகளும் விஜய் பக்கம் வரும். இவை தவிர நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞர்கள் உட்பட பல்வேறு கட்சிகளில் உள்ள இளைஞர்களின் வாக்குகளும் கிடைக்கும்.
நாம் தமிழர் கட்சி, கூட்டணி வைக்கமாட்டோம் எனக் கூறுகிறது, அக்கட்சியால் ஆட்சிக்கு வர முடியாத சூழலில், அந்தக் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். கொள்கை உணர்வு இருந்தாலும், அதிகாரப் பசி என்பதும் இருக்கும். உள்ளூரில் ஒரு கவுன்சிலர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையாவது இருக்கும். அவர்கள் விஜய் பக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால், நாம் தமிழர் கட்சியின் பெரும்பாலான வாக்குகள் விஜய் பக்கம் போகும். தேர்தல் நெருங்க நெருங்க விஜய்யின் செயல்பாடுகளைப் பொறுத்து விஜய்க்கு வாங்கி வங்கி உருவாகும்.
கேள்வி: சீமான் நேரடியாகவே விஜய்யை தாக்கத் தொடங்கிவிட்டார். முன்பு, என்ன இருந்தாலும் விஜய் என் தம்பி எனக் கூறியவர், இந்த மாநாட்டுக்கு பிறகு மிகத் தீவிரமாக விஜய்யை விமர்சித்துள்ளார். விஜய்க்கு கொள்கையே கிடையாது, கூமுட்டை என்று பேசி இருக்கிறார். சீமான் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் தவெகவிற்கு செல்வதற்கு தயாராவதை உணர்ந்து தான் சீமான் இப்படி பேசி வருகிறாரா?
ப்ரியன்: தவெக மாநாட்டுக்கு கூடிய கூட்டம் சீமானை அசைத்துப் பார்த்திருக்கிறது. விஜய்க்கு கூடிய கூட்டத்தை சீமான் எதிர்பார்க்கவில்லை. இப்போதெல்லாம் அரசியல் மாநாட்டுக்கு தன்னிச்சையாக கூட்டம் சேர்வது அபூர்வம். அங்கு 3 லட்சம் பேர் வந்தார்கள் என்றால் அவர்கள் 30 லட்சம் பேரை பிரதிபலிக்கிறார்கள். தனது வாக்கு வங்கியில் பெரிய ஆபத்து வந்துவிடும் என நினைத்துத்தான் சாமியாடுகிறார் சீமான்.
சாதி ரீதியாக வாக்குகளை ஒருங்கிணைக்கும்போது, அதற்கு எதிர்விளைவுகளும் உண்டு. நீண்டகால நோக்கில் பார்த்தால் தனது வாக்குகளை சீமான் இழக்கக்கூடும். தனது ஓட்டு வங்கியில் மிகப்பெரிய பாதிப்பு வரும் என்பதை உணர்ந்துவிட்ட சீமான், விஜய்யை மோசமாக தாக்கும் இடத்திற்கு இறங்கிவிட்டார் என்றே தெரிகிறது.
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மைனாரிட்டி சாதிகளைச் சேர்ந்த தலைவர்களாக இருந்தது, அவர்கள் எல்லா சமூக மக்களாலும் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணமாக இருந்தது. அதேபோல, விஜய் கிறிஸ்தவர் என்ற பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்தாலும், அவர், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற தோற்றம் தான் இருக்கிறது. அதுவே அவருக்கு பிளஸ்ஸாக இருக்கும்.
நாம் கஷ்டப்பட்டு சிறுக சிறுக குருவி மாதிரி சேர்த்த ஓட்டு வங்கியை மொத்தமாக வந்து தூக்கிச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தான் விஜய்யை கடுமையாக தாக்குகிறார் சீமான்.
கேள்வி: திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் அரசியலைப் பேசுபவர் திருமாவளவன். அதையே இன்றைக்குப் பேசும் விஜய்யை ஏன் திருமாவளவன் எதிர்க்கிறார்?
ப்ரியன்: ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசுவது, திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் என்பதால், திருமாவளவன் அதனை விமர்சிக்கிறார். விஜய்யின் மாநாட்டுக்கு திருமா வாழ்த்து சொல்கிறார். ஆனால், பாஜகவை எதிர்ப்பதில் விஜய்யிடம் தெளிவில்லை என்கிறார். விஜய்யை சீமான் பயத்தில் எதிர்ப்பதும், திருமாவளவன் விமர்சிப்பதும் ஒன்றல்ல. திருமாவளவன், அரசியல் ரீதியாக விஜய்யின் பார்வையை விமர்சிக்கிறார்.
இவ்வாறு பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications