மூத்த எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார்!
மூத்த தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் (88) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
Recommended Video

சென்னை: மூத்த எழுத்தியல் தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் (88) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஐராவதம் மகாதேவன் 1930ல் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் பிறந்தார். 1987-1991 வரை இவர் தினமணி ஆசிரியராக இருந்துள்ளார்.
இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார்.

கல்வெட்டு துறை
கல்வெட்டு துறையில் தமிழ் தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி காரணமாக இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர், அதில் ஆய்ந்து தோய்ந்தவர். உலகப் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞரும் கூட. வித்யாசகர் கல்வி அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்து வந்தார்.

சிந்துசமவெளி எழுத்து
சிந்துசமவெளி எழுத்துகளுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் ஐராவதம் மகாதேவன். வயது முதிர்வு காரணமாக இவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் இருந்து சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரங்கல் தெரிவித்தனர்
இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை, அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் இவரது மறைவிற்கு பல தமிழறிஞர்கள், முக்கியஸ்தர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கண் தானம் வழங்கிய வள்ளல்
இவர் 15 வருடங்களுக்கு முன்பே கண் தானம் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன்படி இன்று இவரது கண்கள் தானமாக பெறப்பட்டது. சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் வங்கிக்கு அவரது கண் வழங்கப்பட்டுள்ளது. இறப்பிற்கு பின்பும் அவர் தானம் வழங்கி சென்றுள்ளது பலரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications