செந்தில் பாலாஜி விவகாரம்: அதிகார வரம்பை மீறிய ஆளுநர் ரவி- மாஜி அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி சாடல்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமக்கான அதிகார வரம்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ஏன்.ரவி மீறி இருப்பதாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கடுமையாக சாடி உள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதேநேரத்தில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்து வந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணையும் வெளியிட்டது.

இந்நிலையில் திடீரென, செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, அவரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஒரு அறிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு வெளியிட்டார். இந்த அறிக்கை மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு, அதன் முதலமைச்சருக்கான அதிகாரத்தில் குறுக்கிட்டு ஆளுநர் அமைச்சர்கள் விவகாரத்தில் தலையிடுவதா ? என பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் மத்திய அரசும் இதனை சுட்டிக்காட்டியதாகவும் இதனையடுத்து தமது அறிக்கையை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அமைச்சர்கள் விவகாரத்தில் தேவை இல்லாமல் தலையிட்டு அதே முடிவை உடனேயே மாற்றிக் கொண்ட ஆளுநரின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் அனைத்துமே தெளிவாக, அமைச்சர்கள் விவகாரம் என்பது ஒரு மாநில முதல்வருகான அதிகார வரம்புக்குட்பட்டது; அதில் மாநில ஆளுநர் தலையிடவே கூடாது என கூறி இருக்கின்றன. அதனையும் மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படி செய்திருப்பதற்கு கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மத்தியில் தற்போது ஆளும் பாஜக அரசில் 3 ஆண்டுகள் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்த முகுல் ரோத்தகி, ஆளுநர் தமக்கான வரம்பை அப்பட்டமாக மீறி இருக்கிறார். அமைச்சர் ஒருவரை தன்னிச்சையாக ஆளுநரால் பதவி நீக்கம் செய்யவே முடியாது. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆளுநர் செயல்படவே முடியும். தற்போதைய விவகாரத்தில் ஆளுநர் அப்பட்டமாக அதிகார வரம்பை மீறி உள்ளார் என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications