புழல் சிறையில் செந்தில் பாலாஜி.. 16வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. ஜாமின் எப்போது?
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 7 மாத காலமாக புழல் சிறையில் அடைபட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இதய பாதிப்பு ஏற்படவே ஆபரேசன் செய்யப்பட்டது. ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி.

இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6 மாத காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டார்.
அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து இன்றைய தினம் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் சிறையில் இருந்து அவர் எப்போது வீடு திரும்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜாமின் கிடைத்து விடும் என்று நம்பிக்கையோடு இருந்தார் செந்தில் பாலாஜி. ஜாமின் கிடைக்காமல் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருவதால் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம் செந்தில் பாலாஜி.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி. அவரது மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications