விஜயகாந்த் சமாதியில் சின்ன கவுண்டர் பாட்டு பாடி அழுத ராஜலட்சுமி, செந்தில் ஜோடி! நெட்டிசன்கள் கோபம்!
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி தம்பதியினர் ''அந்த வானத்தைப் போல் மனம் படைத்த மன்னவனே'' என்ற பாடலை பாடி மரியாதை செலுத்தினர்.
செந்தில்கணேஷ் இந்தப் பாடலை தனது செல்போனில் பார்த்து பாடிக்கொண்டிருக்கும் போது ராஜலட்சுமி கண்கலங்கிவாறு தனது துயரத்தை வெளிப்படுத்தினார். கண்களில் வெளிவந்த கண்ணீரை துடைத்தவாறு விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் நின்றார். இதனிடையே இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் பலரும் விஜயகாந்த் மறைந்து 6 நாட்கள் கழித்து அஞ்சலி செலுத்தச் சென்றுவிட்டு எதற்கு இந்த ஓவர் ஆக்டிங் என்றும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டாம் எனவும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கமெண்ட்களை பதிவிட்டு நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி தம்பதியை விமர்சித்துள்ளனர். விஜயகாந்த் மீது அன்பு இருக்குமேயானால் அவரது உடலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த 2 நாட்களும் ஏன் செல்லவில்லை எனவும் குமுறியுள்ளனர்.
இதனிடையே விஜயகாந்த் தான் தனக்கு ரோல் மாடல் என்றும் தனது சிறு வயது முதல் விஜயகாந்த் என்றால் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அவரது திரைப்படங்களை பற்றித்தான் நண்பர்களுடன் பேசுவோம் எனவும் கூறியுள்ளார் செந்தில்கணேஷ். விஜயகாந்த் உயிரோடு இருந்தவரை அவரை எப்படியாவது நேரில் ஒருமுறையேனும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால் தன்னால் அது முடியவில்லை எனவும் உருக்கம் தெரிவித்தார்.

அதேபோல் விஜயகாந்த் கட்சிக்கு தான் தாம் முதல்முறையாக வாக்களித்ததாகவும் கூறிய செந்தில் கணேஷ், அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடருவோம் என்றும் விஜயகாந்திடம் இருந்து கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாகவும் கூறினார். செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி தம்பதியை போலவே இன்னும் பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications